கேரளாவின் பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை விழா கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கியது. வருகிற 26-ந்தேதி பகல் 11.55 மணிக்கு மேல் நண்பகல் 1 மணிக்குள் ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடக்கிறது.
அப்போது சுவாமி ஐயப்பன் பராம்பரிய தங்க நகைகள் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அவருக்கான 420 பவுன் நகைகள் அனைத்தும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் பாரமரிப்பில் உள்ள ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாப்பாக உள்ளது.
இங்கிருந்து தங்க நகைகள் ஊர்வலமாக சபரிமலை எடுத்துச் செல்லப்படும். வருகிற 22-ந்தேதி இதற்கான யாத்திரை தொடங்குகிறது. அன்று ஒமலூர் ரத்தகண்ட சாமி கோவிலில் தங்கும் ஊர்வலத்தினர் மறுநாள் 23-ந்தேதி காலையில் புறப்பட்டு முருங்கன்மலை மகாதேவர் கோவிலை சென்றடைகிறார்கள்.
அங்கு இரவு ஓய்வுஎடுத்த பின்பு 24-ந்தேதி காலை பெருநாடு கோயிக்கல் தர்மசாஸ்தா கோவிலில் தங்கி 25-ந்தேதி பகல் 12.30 மணிக்கு பம்பை சென்றடைகிறார்கள். அங்கிருந்து சிறப்பு பூஜைகள் முடித்து மாலை 5 மணிக்கு சரங்குத்தி வழியாக சன்னிதானத்தை அடைகிறார்கள். அங்கு 18-ம்படியில் சபரிமலை மேல்சாந்தி மற்றும் தந்திரிகளிடம் தங்க அங்கி ஒப்பு விக்கப்படுகிறது.
இவர்களுடன் திருவிதாங் கூர் தேவஸ்தான அதிகாரிகளும் சேர்ந்து அவற்றை சன்னிதானத்தில் வைக்கிறார்கள். 26-ந்தேதி மண்டல பூஜையன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெறுகிறது.
பின்னர் அன்றிரவு 10.50 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. அதன் பின்பு மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்படுகிறது.
ஜெயலலிதா மறைவையொட்டி சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்களின் எண்ணிக்கை கடந்த 2 நாட் களாக குறைவாக இருந்தது. நேற்று மாலை முதல் மீண்டும் தமிழக பக்தர்கள் சபரிமலைக்கு வர தொடங்கினர்.
திருவனந்தபுரத்தையடுத்த கோட்டூர் வனப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் உள்பட 101 ஆதிவாசிகள் நேற்று இருமுடி கட்டி சபரிமலை சென்றனர். அவர்கள் ஐயப்பனுக்காக காட்டு தேன், காட்டுப்பூக்களை எடுத்துச் சென்றனர்.