திருகோணமலையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது திருகோணமலை விளாங்குளப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் விளாங்குளம், கண்டி வீதி, உப்புவெளி எனும் முகவரியை சேர்ந்த 46 வயதுடைய பெண் எனவும் தெரியவருகிறது.
குறித்த பெண்ணின் வீட்டில் வைத்து 120 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் கணவன் ஹெரோயின் விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மனைவியிடமிருந்த போதைப் பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அக்கரைப்பற்றில் இருந்து திருகோணமலை தனியார் பஸ் ஒன்றில் வைத்து குறித்த பஸ் நடத்துநரான 23 வயதுடைய இளைஞன் கஞ்சா போதைப் பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்டதாக திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர் .
குறித்த பஸ் நடத்துனரான இளைஞர் தனது ட்ரவலிங் பேக்கில் சிறிய குழாயில் சுற்றி வைக்கப்பட்டவாறு குறித்த கஞ்சா போதைப் பொருளினை மறைத்து வைத்திருந்ததாகவும் அதை பரிசோதனை செய்த போது அதிலிருந்து 350 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த பெண், இளைஞன் ஆகியோர் போதைப் பொருளுடன் உப்புவெளி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.