கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய சதோச பரிவர்த்தனைகள் குறித்த பில்லியன் ரூபாய் மதிப்புமிக்க தகவல்கள் அடங்கிய ஆவணங்களை குற்ற புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக தெரியவருகின்றது.
கொழும்பில் உள்ள தனியார் வீடு ஒன்றில் கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற இந்த விசேட தேடுதலின்போது குறித்த ஆவணங்களை சி.ஐ.டி.யினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் 2016-2017 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அரிசி இறக்குமதி, ஜெனரேட்டர்களின் கொள்முதல், பல்வேறு நபர்களின் பெயரில் வாங்கிய நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை உள்ளடக்கிய ஏராளமான நில பத்திரங்கள் பற்றிய விவரங்கள் இருந்ததாக உயர்மட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த ஆவணங்கள் ஒரு தனியார் வீடு பதுக்கி வைப்பதற்கு பதிலாக, சத்தோச நிறுவனத்திலேயே வைத்திருக்க வேண்டும் என தெரிவித்த அவர் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பில்லியன் ரூபாய் மோசடிகளை மூடிமறைக்க முயன்ற செய்யப்பாடுகளாக இது இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை இந்த ஆவணங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள, குற்றப் புலனனாய்வுத் திணைக்களத்தின் புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் நுவான் வெதசிங்க மேற்பார்வையில் இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.