சீனாவில் கொரொனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளது. நேற்று (10) மட்டும் சீனாவில் 108 மரணங்கள் நிகழ்ந்தன. கொரோனா வைரஸ் தாக்கத்தால் அதிகமானவர்கள் உயிரிழந்த நாளாக நேற்றைய நாள் பதிவாகியுள்ளது.
வைரஸ் தாக்கத்தால் நேற்று நள்ளிரவு வரை சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,016ஆக அதிகரித்துள்ளது என தேசிய சுகாதார ஆணையம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
வைரஸால் 2,478 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,638 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று பதிவான 108 மரணங்களில், 103 மரணங்கள் ஹூபே மாகாணத்தில் பதிவாகின. வைரஸ் தொற்று ஆரம்பித்த மாகாண தலைநகரான வுஹானில் நேற்று 63 பேர் உயிரிழந்தனர்.
ஏனைய உயிரிழப்புகள் ஹிலோங்ஜியாங், அன்ஹுய் மற்றும் ஹெனான் மாகாணங்களிலும், தியான்ஜின் மற்றும் பெய்ஜிங் நகரங்களிலும் பதிவாகின என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
திங்களன்று பிரதமர் லி கெக்கியாங் தலைமையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுபவர்களிற்கு, மூலப்பொருள் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்கவும், முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு ஆடைகளை வழங்கவும் மேலதிக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உறுதியளிக்கப்பட்டது.
நாடு முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 20,000 மருத்துவ பணியாளர்கள் ஏற்கனவே வுஹானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மேலும் மருத்துவக் குழுக்கள் அனுப்பப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
திங்களன்று, சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் தொற்றுநோய் தொடங்கிய பின்னர் முதல் முறையாக பகிரங்கமாக தோன்றினார். பெய்ஜிங்கில் வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் வைத்தியசாலையொன்றின் சுகாதார வசதிகளைப் பார்வையிட்டார்.