யாழ்ப்பாணப் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான பகிடிவதை நடைபெற்றதாகக் கூறப்படுவது தொடர்பில், எனக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என்று வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அலுவலகத்தில் இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர்,
கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதைகள் நடைபெற்றமை தொடர்பில் ஊடகங்கள் வாயிலாகவே அறிந்து கொண்டேன். அதன் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுப்பதில் சில தடயங்கள் உள்ளன.
எனவே, பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் ஒருவர் முறைப்பாடு செய்தால், அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து குற்றவாளிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்க ஆவண செய்வேன்.
பாதிக்கப்பட்ட தரப்பு தைரியமாக முன்வந்து முறைப்பாடு செய்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்கினால், குற்றவாளிகளைத் தண்டிக்க முடியும் என்றார்.