ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுடன் அவசர பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான அழைப்பை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விடுத்துள்ளது.
கொழும்பிலுள்ள சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர, முக்கிய விடயங்கள் குறித்து தமது கட்சி அவர்களுடன் கலந்துரையாட விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கூட்டணிக்கு தேவையான பிரதான நடவடிக்கையாக, ஸ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய முன்னணியின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி என்ற பெயரில் பதிவுசெய்வதாகவே இருந்தது. அதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த கட்ட நடவடிக்கையாக அதற்கு அதிகாரிகள் குழுவை நியமிக்க வேண்டும்.
மைத்திரிபால சிறிசேன சம தலைவர் பதவி அந்தஸ்தை கோரவில்லை. அதுவே உண்மை. அன்று இருந்த நிலைமையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் இந்த நாட்டின் ஜனாதிபதி எமது கட்சியின் தலைவர்.
அப்போது சமமான தலைவராக மைத்திரிபாலவை நியமிப்போம் என யோசனை முன்வைக்கப்பட்டது. ஜனாதிபதியாக இருப்பவரை தலைவராக நியமிக்காவிடின் எவ்வாறு அதனை முன்நகர்த்துவது? எனினும் அன்று இருந்த நிலைமையை விட இன்று இருக்கும் நிலைமை வித்தியாசமானது.
எதிர்காலத்தில் கூட்டணியை அமைக்க வேண்டுமாயின் பதவிகளை பகிர்ந்துகொள்வது தொடர்பில் கலந்துரையாட முடியும். விசேடமாக கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பை விடுத்திருக்கின்றோம்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோருடனும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பேச்சுவார்த்தை வெற்றியளித்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச முடியும்.
தாமரை மொட்டுச் சின்னம் தொடர்பில் எமக்கு பிரச்சினை இல்லை. முதலில் இருந்தே நான் அதனை கூறினேன். ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியை நாம் உருவாக்க வேண்டும். கூட்டணியின் சின்னமாக தாமரை மொட்டு இருப்பதில் பிரச்சினை இல்லை. அன்று கூறியது போன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு சின்னம் இல்லாமல் போகும். எமக்கு அது பிரச்சினை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.