என்னுடைய ஐந்து வருட பதவிக்காலத்தில், ஒரு சதத்தையேனும் நாம் மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பவில்லை. முதலாவது, வருடத்தில் 12,000 மில்லியன் கேட்டோம். அப்படி இருக்கையில் திருப்பி அனுப்ப காசு எங்கு இருக்கின்றது என வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்தியா பயணமான பிரதமர் மகிந்த ராஜபக்ச, வடக்கின் முன்னாள் முதலமைச்சர், க.வி. விக்னேஸ்வரன் வடக்கு மாகாணத்திற்கு அனுப்பிய பணத்தினை முழுமையாகப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதாக குற்றம்சாட்டியிருந்தர்.
இந்நிலையில், இது தொடர்பில் கருத்துரைத்துள்ள விக்னேஸ்வரன்,
“என்னுடைய ஐந்து வருட பதவிக்காலத்தில், ஒரு சதத்தையேனும் நாம் மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பவில்லை. முதலாவது, வருடத்தில் 12,000 மில்லியன் கேட்டோம். அப்படி இருக்கையில் திருப்பி அனுப்ப காசு எங்கு இருக்கின்றது?
அதன் பின் வந்த வருடங்களில் ஒரு வருடத்தில் மூவாயிரத்து சொச்சம் தருவதாகக் கூறி பகுதி பகுதியாகத் தான் தரப்பட்டது. அதுவும் ஒரு பகுதி அடுத்த வருடத்தில் தரப்பட்டது. அந்தக் காரணத்தினால் எங்கள் செயற்றிட்டங்களும் பாதிக்கப்பட்டன; தாமதம் அடைந்தன.
நாங்கள் பதவியில் இருந்து வந்த பின்னர் சென்ற வருடம் கூட ஒரு பாரிய தொகை மத்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருக்கின்றது. ஆகவே பணத்தை மத்திய அரசாங்கம் எமக்குத்தராமல் இருந்துவிட்டு நாம் திருப்பி அனுப்பினோம் என்று இந்தியாவில் சென்று எமது பிரதமர் கூறுவது விந்தையாக இருக்கின்றது.
உண்மையில் பிரதமர், இந்தியாவுக்குச் சென்று, தங்களைக் குறை கூறி, அவருக்கு நற்பெயர் பெற்றுக்கொள்ள பார்க்கின்றாரா? அவர் உண்மையில் தெரியாமல் கூறினாரா அல்லது தெரிந்தும் எமக்கு மாசு கற்பிக்கக் கூறினாரா என்று தெரியவில்லை” என்றார்.