யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பகிடிவதை குறித்து விசாரணை நடத்த அரசாங்கம் ஆணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது.
பகிடிவதையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்று இந்த ஆணைக்குழுவில் முறையிட முடியும் என்று உயர்கல்வி அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மாணவர்களால் முதலாம்தர மாணவிகளுக்கு விதிக்கப்பட்ட ஒருசில அநாகரிக பகிடிவதை செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
இதனையடுத்து சில மாணவர்களுக்கு அந்த பல்கலைக்கழகம் இடைக்காலத் தடையை விதித்த அதேவேளையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடுகளும் பதிவாகியிருந்தன.
இந்நிலையில் கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த வருடத்தில் 2000 மாணவர்கள் பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக படிப்பினை கைவிட்டுச் சென்றுள்ளதாகவும், இதன் காரணமாக பகிடிவதை குறித்த விசாரணை செய்ய ஆணைக்குழு ஒன்றை அரசாங்கம் நிறுவியிருப்பதாகவும் கூறினார்.
“மிகவும் அச்சமடையும் வகையில், பயங்கரமாகவும், சூசுமமாகவும் கிடிவதை மேற்கொண்ட காரணத்தினால் இந்த நாட்டு மாணவர்கள் சுமார் இரண்டாயிரம் பேர்வரை கடந்த வருடத்தில் மட்டும் அரச பல்கலைக்கழகங்களில் இருந்து இடைவிலகியுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
இந்த அறிக்கையை நான் முழுமையாக ஏற்கமாட்டேன். ஆகவே உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஒருவர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகங்களில் இருந்து விட்டுச்சென்ற மாணவர்களுக்கு உதவிசெய்வதற்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தரவும் விசாரணை செய்வதற்காகவே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகங்களில் இருந்து இடைவிலகிய மாணவர்களுக்கு முழுமையாக பாதுகாப்பு உறுதிப்படுத்தல் வழங்கப்படும் என்பதுடன், அவ்வாறு மாணவர்களைப் பாதுகாக்க முடியாத அரசாங்கம் ஆட்சியில் இருந்தும் பயனில்லை.
அதனால் ஆணைக்குழுவுக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் முறையிடலாம்.
பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சர்வமதத் தலைவர்கள், ஓய்வுபெற்ற நீதியரசர்கள் ஆகியோர் இந்தக் குழுவில் இருக்கின்றனர். ஆணைக்குழுவில் மாணவர்கள் முறையிடலாம் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்” என கூறியுள்ளார்.