வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை தரச்சான்றிதழ் லேபல் பொறிக்கப்படாது திருகோணமலையில் விற்பனை செய்யப்பட்ட போது அப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாவனையாளர் அதிகார சபையினால் செவ்வாய்கிழமை (11) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
பாவனை அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர் இதை த.வசந்தசேகரன் தெரிவித்துள்ளார்.
காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், உற்பத்தியாளர்களின் விபரங்கள் பொறிக்கப்படாத பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், போலியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் உரிமையாளர்களினால் அது தொடர்பான சரியான ஆவணங்களை வழங்குகின்ற போது அந்த பொருட்களை திருப்பி கொடுப்பதற்கும் இதனை செய்யாது தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது திருகோணமலை, மூதூர், கந்தளாய், கிண்ணியா ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 59 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் அல்லது வர்த்தகர்கள் பாவனையாளர்களுக்கு சந்தேகம் அல்லது முறைப்பாடுகள் இருக்குமாக இருந்தால் பாவனையாளர் அதிகார சபையின் அலுவலக 0262050911 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.