பிறந்து 26 நாட்களே ஆன ஆண் குழந்தையொன்று சளிக்கு மருந்து கொடுத்தபோது உயிரிழந்த சம்பவம் ஒன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நல்லூர், தோப்பூர் பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 10 ஆம் திகதி காலை சளி காரணமாக தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு தாய் அன்டன் நிலோஜியினால் பிறந்து 26 நாட்களான தனுஜன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது, வைத்தியரால் குழந்தை பரிசோதிக்கப்பட்டு ஆவி பிடிக்கப்பட்ட நிலையில் பாணி மருந்து வழங்கப்பட்டதனையடுத்து அதனை இரவிற்கும் வழங்குமாறு வைத்தியர் அறிவுறுத்தியதன் பின்னர் குறித்த குழந்தை வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வீடுக்கு அழைத்துவரப்பட்ட குழந்தை மூச்சற்ற நிலையில் உள்ளதை அவதானித்த தாய் குழந்தையை தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளார்.
இதன்போது, குழந்தையை பரிசோதித்த வைத்தியர் குழந்தை உயிரிழந்து விட்டதாக குழந்தையின் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த குழந்தையின் சடலமானது பிரேத பரிசோதனைக்காக சம்பூர் பொலிஸாரினால் எடுத்துச் செல்லப்பட்டு தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.