தனது கர்ப்பத்திற்கு 10 வயது சிறுவனே காரணம் என அதிர்ச்சி கொடுத்த 14 வயது சிறுமி, தற்போது பொய் கூறியிருப்பது தெரியவந்துள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த தர்யா என்கிற 14 வயது சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, தனது 10 வயது காதலனால் கர்பமடைந்திருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, இணையதளவாசிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இதனையடுத்து இருவரும் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில் தோன்றி, தங்களுக்குள் நட்பு உருவான விதம் மற்றும் காதல் குறித்து பேசினர்.
அப்போது இவான் எனப்படும் அந்த 10 வயது சிறுவன், தர்யா 2 மாத கர்ப்பிணியாக இருப்பதற்கு நான் தான் காரணம் எனவும் கூறினான்.
ஆனால் மருத்துவர்கள் அதற்கு சாத்தியமில்லை என கூறி, டி.என்.ஏ உள்ளிட்ட சோதனைகளை மேற்கொண்டனர். டி.என்.ஏ முடிவுகள் வெளியிடப்படாவிட்டாலும் மற்ற முடிவுகளின்படி, தந்தையாகுவதற்கான தகுதிகள் தற்போது சிறுவனுக்கு இல்லை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தனக்கு நடந்த கொடுமையை மறைப்பதற்காகவே பொய் கூறியதாக தெரிவித்துள்ளார்.
15 வயதான ஒருவன் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் தற்போது அந்த சிறுவனிடம், சைபீரியாவின் கிராஸ்நோயார்ஸ்க் பகுதியில் வீட்டுக் காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக ரஷ்யாவின் மிகப்பெரிய தினசரி செய்தித்தாள் Komsomolskaya Pravda தகவல் வெளியிட்டுள்ளது.