தமிழகத்தில் உள்ள முகாமில் வாழும் இலங்கை தமிழ்ப்பெண்கள் மற்றும் ஆண்கள் மாவட்ட துணை ஆட்சியரிடம் கண்ணீருடன் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் 74 தமிழ் குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இந்த அகதிகள் முகாமுக்கு மாவட்ட துணை ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அவரிடம், கடந்த 6 ஆண்டுகளாக அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை, நீங்கள் தான் வந்திருக்கிறீர்கள் என்று கூறிவிட்டு இலங்கை தமிழர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அவர்கள் கூறுகையில், அகதிகள் முகாமில் பழுதடைந்துள்ள வீடுகளை சீரமைத்து தர வேண்டும். கடந்த 3 மாதங்களாக துர்நாற்றம் வீசும் அரிசியை தருவதால் சாப்பாடு செய்து சாப்பிட முடியவில்லை. எனவே ரேஷனில் தரமான அரிசி வழங்க வேண்டும்.
சுய தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில் செய்வதற்கு பெண்களுக்கு வங்கிக்கடன் பெற்றுத்தர வேண்டும். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சாதி சான்றிதழ் பெற்றுத் தர வேண்டும் என கோரினார்கள்
இதை தொடர்ந்து அவர்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீகாந்த் உறுதியளித்தார்.