நான் பருத்தித்துறையில் வேலைசெய்யும் போது ஒரு இளைஞன் மருத்துவ ரீதியாக உதவி வேண்டுமென மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்தான்.
என்ன பிரச்சினை என்றேன்?
நான் ஆண்தானா என்று சோதிக்க வேண்டுமென்றான்.
அவர் ஒரு பட்டதாரி. நல்ல வேலையில் இருப்பவர்.
ஏற்கனவே பல வைத்தியர்களைச் சந்தித்து பல சோதனைகளைச் செய்திருந்தார்.
அவர் பிரச்சினை என்னவென்று கேட்டேன்?
தான் உருவத்தில் ஆணாக கம்பீரமாக இருந்தாலும் தனக்கு தன் ஆண்மை மீது சந்தேகமாக உள்ளதாகவும் அதனால் மணம் முடிக்க பயமாக உள்ளதாகவும் சொன்னார்.
அவரை நேரடியாக வர வைத்து உரையாடினேன்.
அவருடைய சந்தேகத்திற்கான காரணம் அவருடைய ஆண் உறுப்பு சிறிதாக இருப்பதாக அவர் நினைப்பது.
எப்படி இந்த எண்ணம் அவருக்கு வந்தது?
ராகிங் நேரத்தில் (அவர் யாழ் பல்கலை பட்டதாரி இல்லை) சக மாணவர்களின் உறுப்போடு ஒப்பிட்டு அந்த மனப்பான்மை அவருக்கு ஏற்பட்டிருந்தது.
இது நிறைய ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சினை. பொதுவாக பாலியல் படங்களை பார்த்து இவ்வாறு தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்பவர்கள் அதிகம்.
குறிப்பிட்ட அந்த இளைஞன் பல வருடங்களாக பல வைத்திய முறைகளை முயற்சித்துப் பலனளிக்காமல் மனமுடைந்து போயிருந்தார்.
முகப்புத்தகத்தில் அறிமுகமானவர் என்றாலும் அவர் ” இந்தப் பிரச்சினையோடு மணமுடித்து ஒரு பெண்ணை ஏமாற்ற விரும்பவில்லை” என்று சொன்ன அவரின் நேர்மை பிடித்திருந்து.
அவருக்காக கணிசமான நேரத்தை ஒதுக்க முடிவெடுத்தேன்.
அவரின் ஆணுறுப்பு வளர்ச்சி அடையவேண்டும் என்பதே அவரின் ஒரே எதிர்பார்ப்பு.
அவரைப் பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு உடல் ரீதியாக எந்தப் பிரச்சினையுமில்லை உள ரீதியான பாதிப்பு மட்டுமே உள்ளதென புரிந்து கொண்டேன்.
மேலதிக எந்தச் சோதனையும் தேவையில்லை என்றாலும், அவர் இணையத்தில் தேடி அறிந்து வந்து கட்டாயப்படுத்தியதற்காக சில டெஸ்ட்களை அவரின் திருப்திக்காக செய்துவிட்டு உளரீதியான ஆற்றுப்படுத்தும்களை முன்னெடுத்தேன்.
மிகப்பெரிய சவால் மட்டுமல்ல ஒரே ஒரு சவால், அவரின் எதிர்பார்ப்பான அவருடைய உறுப்பு வளர வேண்டுமென்ற எதிர்பார்ப்பை தகர்க்க வேண்டும். அதை தகர்த்துவிட்டாலே அவரின் பிரச்சினை தீர்ந்துவிடும்.
நிறைய விளக்கங்களைக் கொடுத்து உறுப்பின் அளவென்பது ஆட்களுக்கு ஆள் வேறுபடும். அதிலே ஒருவரின் ஆண்மை தங்கியில்லை என்று அவரை நம்ப வைக்க நிறைய நாள் எடுத்தது.
அநேகமானவை முகப்புப் புத்தக உரையாடல் என்பதால் அவரால் நிறைய சந்தேகங்களை சஞ்சலமில்லாமல் கேட்க முடிந்தது ஓரளவுக்கு விடயத்தை இலகுவாக்கியது.
ஒருகட்டத்தில் அவருக்கு திருப்தி ஏற்பட்டாலும், திருமணத்தின் பின் தன்னால் ஒரு பெண்ணை திருப்திப்படுத்த முடியுமா என்று பயப்படுவதாக சொன்னார்.
நிறைய விளக்கங்களுக்குப் பிறகு ஒரு அறிவுரை வழங்கினேன்( அதை இங்கே சொல்லி சிக்கலில் மாட்டவிரும்பவில்லை).
அவரே இதை பேஸ்புக்கில் எழுதுங்கள் என கேட்டுக்கொண்டார்.
இதை இங்கே எழுதக்காரணம் பெரும்பாலான ஆண்களின் பாலியல் பிரச்சினைகள் உள ரீதியான தாழ்வுச் சிக்கலினாலேயே ஏற்படுகிறது.
இந்த தாழ்வுப் சிக்கல் இன்னொரு ஆணோடு தன்னை ஒப்பிடுவதால் ஏற்படுகிறது. பாலியல் படங்கள் இதற்கு முக்கிய பங்காற்றுகிறது. அதைவிட முக்கியமான இரண்டு காரணங்கள் உள்ளன,
1. நண்பர்களின் அதீதமான மிகைப்படுத்தல்கள்:சிலர் தங்களை உயர்வாக காட்டிக்கொள்ள தங்கள் பாலியல் நடவடிக்கைகள் சம்பந்தமாக மிகைப்படுத்தி கூறுவதை உண்மையென நம்பும் ஒருவர் தன்னால் அப்படி முடியவில்லையே என்ற தாழ்வுபச் சிக்கலுக்கு உள்ளாகிறார்.
2. மாற்று மருத்துவர்கள்: நிறைய மாற்று மருத்துவர்கள் தங்கள் வருமானத்திற்காக பொய்யான விளம்பரங்கள்/ விளக்கத்தை கொடுத்து இளைஞர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள்.
இவ்வாறு தாழ்வுச் சிக்கலில் சிக்கிக்கொண்டதில் ஒரு சிலரே இந்த இளைஞன் போல வெளியே சொல்லி தீர்வினைப்பெற முயற்சி செய்கிறார்கள்.
அநேகமானவர் இதை வெளிப்படுத்த வெட்கப்பட்டு சொல்லாமல் திருமணம் முடித்து தன்னை மட்டுமல்ல ஒரு பெண்ணையும் வருத்துகிறார்கள்.
திருமணம் முடிப்பது தப்பல்ல, ஆனால் பிரச்சினையை பொறுத்தமானவர்களின் ஆலோசனை பெற்றுத் தீர்த்துவிட்டு மணமுடிக்கவேண்டும்.
அநேகமான ஆண்களின் பாலியல் குறைபாடுகள் உளரீதியான குறைபாடுகளாலேயே ஏற்படுகிறது. அவை எந்த மருந்துகளும் இல்லாமலேயே தீர்க்கப்படலாம். ஆகவே உங்களுக்குள்ளும் இப்படியான சிக்கல் இருந்தால் பொருத்தமான வைத்தியரைச் சந்தித்து இலகுவாக தீர்வைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
இது வெட்கப்பட வேண்டிய விடயமில்லை.
தேவையில்லாமல் அந்த இந்த லேகியங்களை வாங்கி ஏமாறாதீர்கள்.
நன்றி