இலங்கையிடம் கேட்காமல் இலங்கையின் இராணுவத்தளபதியை தமது நாட்டுக்குள் பிரவேசிக்க அமெரிக்கா விதித்த தடையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இலங்கைக்கும் அந்த நாட்டுக்கும் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தனிப்பட்டவர்களுக்கு எதிராக சில நாடுகள் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது பொதுவானது. எனினும் அமெரிக்க அரசாங்கம் இலங்கையின் இராணுவத்தளபதியின் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டு நியாயமற்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இறைமையுள்ள நாடு என்ற வகையில் சுயாதீனமாக நியமித்த இராணுவத்தளபதியின் மீது ராஜதந்திர ரீதியில் குற்றம் சுமத்தப்படுமானால் அது விசாரணை செய்யப்படவேண்டும் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.