நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இன்ஜஸ்ட்ரி குரூப் பிலிங்போனி தோட்டத்தில் நேற்றிரவு (16) தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமும், சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் சந்தித்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் பாதிக்கப்பட்டவர்கள் தோட்ட வைத்தியசாலையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அவசியமான சட்ட ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன். இவர்களுக்கு அத்தியாவசியமான பௌதீக ரீதியிலான தேவைகளை நிறைவேற்ற உரியவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் எதிர்ப்பார்க்கிறேன்.
இதேபோன்று கடந்த வருடம் ஹொலிரூட் தோட்டத்திலும், சந்திரிகிராமம் மேகமலை தோட்டத்திலும், சென் க்ளயார் தோட்டத்திலும் ஏற்பட்ட பாரிய தீ அனர்த்தத்தினால் வீடுகளை இழந்து நிர்க்கதியான மக்களுக்கு இதுவரையிலும் வீடுகளுக்கான தீர்வு வழங்கப்படாத நிலையில் இம்மக்களின் எதிர்காலம் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
எது எப்படியேனும் பாதிக்கப்பட்ட எம்மக்களுடைய பிரதான வீட்டு பிரச்சினைக்கு தீர்வு நிச்சயமாக பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். இதற்காக பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து அவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை என்னுடைய குரலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும் எனவும் தெரிவித்தார்.