பேஸ்புக் சமூக வலைத்தளத்தை பல்வேறு மட்டங்களை சேர்ந்தவர்களும் இன்று பயன்படுத்தி வருகின்ற நிலையில், அதில் பயனாளர்களுக்கு நன்மை பயப்பதற்காக புதிதாக சேர்க்கப்பட்டுள்ள விடயங்களை அறிந்துள்ளோமா என்று கேட்டால் பலரும் இல்லையென்றே பதிலளிக்கின்றனர்.
உலகின் மொத்த சனத்தொகை 780 கோடிகளாக காணப்படுகின்ற நிலையில், பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 250 கோடிகளைத் தாண்டி அதிகரித்து வருகின்றது. அதன்படி உலகில் மூன்றிலொருவர் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர் என எடுகோளாகக் கொள்ளமுடியும்.
பேஸ்புக்கை ஒரு நாடாக கணித்தால், அதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகின் எந்தவொரு நாட்டின் மக்கள் தொகையை விடவும் அதிகமென்பதும் இலங்கையில் 7 மில்லியன் பேஸ்புக் பயனாளர்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. சுமார் 250 கோடிப்பேர் உலாவுகின்ற ஓர் இடம் பேஸ்புக். அதே நேரம் பல கோடிக்கணக்கான போலிப் பயனாளர்கள் சுற்றித் திரிகின்ற ஓர் இடமும் பேஸ்புக்தான். புது நண்பர்கள், கருத்து மற்றும் ரசனை பரிமாற்றங்கள், ஆரோக்கியமான விவாதங்கள் என ஏராளமான நன்மைகள் இருந்தாலும் பேஸ்புக்கில் ஆபத்துகளும் இருக்கின்றன.
அதனால் உடனடியாக கீழ்வரும் விடயங்களை பேஸ்புக்கில் இருந்து நீக்குங்கள் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கை செய்திருக்கின்றனர்.
உறவு நிலை –
பேஸ்புக் மாதிரியான சமூக வலைத்தளத்தில் ‘நான் கல்யாணமானவர், காதலில் இருப்பவர், பிரிந்து இருப்பவர்’ போன்ற உங்களின் உறவு ரகசியங்களை வெளிப்படையாக தெரிவிப்பது அவ்வளவு அவசியமானதல்ல. தவிர, உங்களின் டேட்டிங் வாழ்க்கையை அங்கே பதிவிடுவதும் நல்லதல்ல. இதனால் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பிரச்சினைகள் வர வாய்ப்பிருக்கின்றன.
குழந்தைகளின் புகைப்படங்கள்
உங்களின் குழந்தைகள் மற்றும் நண்பர்கள், உறவினர், தெரிந்தவர்களின் குழந்தைகள் என எந்தக் குழந்தையின் புகைப்படத்தையும் பேஸ்புக்கில் பகிர வேண்டாம். இது குழந்தைகளைக் கடத்துபவர்களுக்கு சாதகமாகிவிடும்.
குழந்தை படிக்கும் பாடசாலை
நிறைய பெற்றோர்கள் பெருமைக்காக தங்களின் குழந்தைகள் படிக்கும் பாடசாலை, அவர்களின் தனித்திறமைகளை புகைப்படம் மற்றும் வீடியோவாக்கி லைக்குகளுக்காக பதிவிடுகின்றனர். இது குழந்தை கடத்துபவர்களுக்கு நீங்களே வழிகாட்டுவதைப் போல அமையும்.
குடிக்கும் புகைப்படங்கள்
உங்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வேலை செய்யும் நிறுவனத்தினர் என எல்லோரும் இருக்கும் இடம் இது. அங்கே மதுபோத்தல்களுடனோ அல்லது ஏதாவது கொண்டாட்ட களியாட்டங்களில் இருப்பது மாதிரியோ பலரும் புகைப்படங்களை பகிர்கின்றனர். ஜாலிக்காக இதைப் பகிர்ந்தாலும் இந்தப் புகைப்படங்கள் உங்கள் மீதான மரியாதையை சீர்குலைக்கும்.
தெரியாதவரை இணைக்க வேண்டாம்.
நீங்கள் கொஞ்சம் பிரபலமாகும்போது நிறைய நண்பர் வேண்டுகோள் வரும். அதில் தெரியாத நபர்களையும் இணைத்துக்கொள்வோம். இதை முடிந்தளவு தவிர்க்கப் பாருங்கள்.
கார்ட் தகவல்கள்
பேஸ்புக்கில் நிறைய விளம்பரங்கள் வரும். அவற்றில் பிடித்ததைக் கிளிக் செய்து ஷொப்பிங் செய்வது பலரின் வழக்கம்.
அப்படி ஷொப்பிங் செய்யும்போது கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்களின் தகவல்கள் பதிவாக வாய்ப்பிருக்கின்றன. அதனால் ஷொப்பிங் முடிந்தவுடன் கார்ட்களின் தகவல்களை உடனடியாக நீக்கிவிடுங்கள்.
தொலைபேசி இலக்கம்
நீங்கள் தெருவில் நடந்து செல்கிறீர்கள். எதிரே வருவோர் போவோர் எல்லோரிடமும் உங்களின் தொலைபேசி இலக்கத்தை தருவதைப் போன்றதுதான் பேஸ்புக்கில் நம்பரைப் பகிர்வது. இன்று தொலைபேசி இலக்கத்தை வைத்தே உங்களின் அனைத்து தகவல்களையும் திருட முடியும். உஷாராக இருங்கள்.
Tagகை தவிருங்கள்
நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களை Tag செய்யலாம். Tag செய்யப்பட்டிருக்கும் பதிவு முக்கியமாக இருந்தாலும் அதைப் பார்த்துவிட்டு Tagகை நீக்கிவிடுங்கள். இல்லையென்றால் அந்த Tag மூலம் அந்நியர் ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்ள வாய்ப்பிருக்கிறது.
பிறந்த நாள்
பெரும்பாலானவர்கள் தங்களின் பிறந்தநாளை குறிப்பிட்டிருப்பார்கள். பிறந்த நாளன்று முகமறியாத பலரின் வாழ்த்துகள் உங்களை மகிழ்ச்சிப்படுத்தலாம். ஆனால், பிறந்த நாளை வைத்தே உங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கு தொழில்நுட்பம் வந்துவிட்டது. பிறந்த நாளைக் குறிப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது. இதுபோக நீங்கள் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல்களையும் தவிருங்கள். உதாரணத்துக்கு இந்த தியேட்டரில் இந்தப் படம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அடுத்து நீங்கள் பயணம் போகும் இடங்களைப் பற்றிய தகவல்கள், அங்கே எடுக்கும் புகைப்படங்கள், பயணத்துக்கான திட்டங்கள் போன்றவற்றை பேஸ்புக்கில் வெளிப்படுத்தாதீர்கள். அது உங்களின் வீடு காலியாக இருக்கிறது, வீட்டில் யாருமே இல்லை என்பதை மறைமுகமாக தெரிவிக்கிறது.
Privacy Checkup tool
எமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் ஆபத்துகள் பல உள்ளன. இதனை உணர்ந்து பேஸ்புக் நிறுவனம் அதன் Privacy Checkup tool-ஐ அப்டேட் செய்துள்ளது.
பேஸ்புக் பயனர்களின் கணக்கு பாதுகாப்பை மேம்படுத்தும் நான்கு புதிய security அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆக, இனிமேல் யாராலும் உங்களின் கணக்கை அவ்வளவு எளிதாக ஹேக் செய்யவோ அல்லது உங்களை பற்றிய தகவல்களை சேகரிக்கவோ முடியாது என்று எதிர்பார்க்கலாம்.
இந்த புதிய அம்சங்களானது, பயனர்களின் பேஸ்புக் கணக்குகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் அவர்களின் தகவல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Privacy Checkup tool- ஆனது கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பேஸ்புக்கில் உள்ளன. மேலும் புதிய அம்சங்களும் அதில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்த புதிய அம்சங்களின் பெயர் என்ன, அதன் வழியாக நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை பற்றி விரிவாக அறிய தொடர்ந்து படிக்கவும்.
முதலாவதாக ‘Who Can See What You Share’ அம்சம்: இது பயனர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் அவர்களின் போஸ்ட்கள் போன்ற ப்ரொபைல் தகவல்களை யார் எல்லாம் காணலாம் என்பதை மதிப்பாய்வு செய்ய உதவும் ஒரு அம்சமாகும்.
இரண்டாவதாக ‘How to Keep Your Account Secure’ அம்சம்: வலுவான கடவுச்சொல்லை அமைத்து உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் பாதுகாப்பை வலுப்படுத்தவும் login அலெர்ட்களை எனேபிள் செய்து வைக்கவும் இந்த அம்சம் உதவும்’ என்று ஒரு வலைப்பதிவு வழியாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. மூன்றாவதாக ‘How People Can Find You’ அம்சம்: மக்கள் உங்களை எப்படியெல்லாம் பேஸ்புக் வழியாக கண்டறியலாம் மற்றும் உங்களுக்கு யாரெல்லாம் பிரெண்ட் ரிக்வஸ்ட்டை அனுப்பலாம் என்பதை மறு பரிசீலனை செய்ய உதவும்.
கடைசியாக ‘Your Data Settings’ அம்சம்: இது பேஸ்புக் வழியாக நீங்கள் லொகின் செய்ய Appகளுடன் நீங்கள் பகிரும் தகவல்களை மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கும். இதன் வழியாக நீங்கள் பயன்படுத்தாத Appகளையும் அகற்றலாம் என்று பேஸ்புக் கூறியுள்ளது. பேஸ்புக்கின் டெஸ்க்டாப் தளத்தில் உள்ள கேள்விக்குறி icon ஐகனைக் கிளிக் செய்து நீங்கள் உங்களின் ப்ரைவஸி செக் டூலை அணுகலாம். ‘தனியுரிமை என்பது மிகவும் தனிப்பட்டது என்று தெரியும். உங்களுக்காக சரியான தனியுரிமை முடிவுகளை நீங்கள் எடுக்க உங்களுக்கு உதவ தனியுரிமை உதவிக் குறிப்புகளை ஒருங்கிணைத்துள்ளோம்’ என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் போன்ற ஒரு செயலியை நாம் இலவசமாக பயன்படுத்தும் போது அவர்கள் எமது தகவல்களை விளம்பரதாரர்களுக்கு விற்பதன் மூலமே சம்பாதிக்கின்றனர் என்பதை நினைவில் நிறுத்தவேண்டும். அதனால் இவ்வாறான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை அடிக்கடி செய்து எமது தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.