நாடாளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத்தேர்தலுக்கு நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசியல் பழிவாங்கள், முரண்பாடான அரசியல் நிர்வாகம் ஆகியவற்றை கொண்டு நாட்டை சிறந்தமுறையில் கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பதுளை, அதம்பிடிய பிரதேச நீர் வழங்கல் திட்டத்தை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் பேசிய அவர்,
தற்போது புதிய அரசாங்கமும், புதிய ஜனாதிபதி , பிரதமரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆனாலும் நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லை.
கடன்களை மீள்செலுத்துவதற்கு நாம் சட்டமூலமொன்றை கொண்டு வர தயாராகி வருகின்றோம். எதிரணி விரும்பினால் அதனை தோற்கடிக்க முடியும்.
அவ்வாறு தோற்கடிக்கும் பட்சத்தில் நாட்டின் எதிர்கால அபிவிருத்தி பயணம் பாதிப்படையும். ஆனாலும் நாட்டின் அபிவிருத்திக்கு அவர்களால் மிக சொற்ப காலத்திற்கே இடையூறு விளைவிக்க முடியும்.
ஏனெனில் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான முதலாவது வாய்ப்பு கிடைக்கும் அந்த முதல் வாய்ப்பிலேயே நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வதற்கு ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றோம்” என தெரிவித்தார்.