இராணுவ தளபதி சவேந்திர சில்வாவை நாட்டுக்குள் பிரவேசிக்க அமெரிக்கா விதித்துள்ள தடை தொடர்பான இலங்கையின் எதிர்ப்பு அமெரிக்கா காங்கிரஸிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இலங்கையில் விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க காங்கிரஸின் உறுப்பினர்களான அமிபோரா மற்றும் ஜோர்ஜ் இ.பி. றோல்டிங் ஆகியோர் இன்று இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவை சந்தித்தனர்.
இதன்போது அமெரிக்காவின் நேரடி முதலீடுகள் உட்பட்ட பல்வேறு ஒத்துழைப்புக்கள் குறித்து இரண்டு தரப்பினரும் கலந்துரையாடினர். பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் இரண்டு தரப்பினரும் கலந்துரையாடினர்.
இதன்போது சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட இலங்கையின் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன அமெரிக்கா சவேந்திர சில்வாவுக்கு எதிராக விதித்துள்ள தடையை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகளில் இவ்வாறான நிகழ்வுகள் தடையாக இருக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்
இதற்கு பதிலளித்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவரும் தாம் இலங்கையின் கரிசனையை அமெரிக்கா காங்கிரஸின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தனர்.
ஏற்கனவே அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமரின் ஆலோசகர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்
இந்தநிலையில் அவர்கள் இன்று தாயகம் திரும்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.