ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களில் இருந்து இலங்கை விலகுவதற்கு தீர்மானித்துள்ளது.
2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 30/1 மற்றும் 40/1 ஆகியவற்றிலிருந்து உடனடியாக விலகுவதென அரசாங்கம் நேற்று முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான சிறப்புக் கூட்டம் நேற்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, அரசாங்கத்தின் பல மூத்த அமைச்சர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நடைமுறையில் உள்ள அரசியல் யதார்த்தங்களின் கீழ் அவற்றை செயல்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளுடன் உடன்படவில்லையென்பதால், அந்த தீர்மானங்களிற்கு இணை அனுசரணை வழங்குவதிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தீர்மானங்களிற்கு முன்னைய அரசு இணை அனுசரணை வழங்கினாலும், அது குறித்து நாடாளுமன்றம் அல்லது அமைச்சரவையில் அது விவாதிக்கப்படவில்லையென்றும், இரண்டு தீர்மானங்களும் தற்போதைய அரசிலமைப்பிற்கு அப்பால் சென்று அதிகார பகிர்வை ஒத்ததாக இருப்பதாக நேற்று விவாதிக்கப்பட்டுள்ளது.
கலப்பு நீதிமன்றத்தை நிறுவுவது, நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியை ஒழித்தல்,
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்தல் மற்றும் காணாமல் போனவர்களின் அலுவலகத்தை நிறுவுதல் போன்றவை இந்த தீர்மானத்தில் அடங்கியுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு அனுசரணை வழங்குவது, அரசியலமைப்பை மீறும் செயல் என நேற்று விவாதிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் இந்த முடிவை அடுத்த வாரமே ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அலுவலகத்திற்கு, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
அதற்கு முன்னதாக இந்த முடிவு அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்காக இலங்கையில் உள்ள மூத்த அதிகாரிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.