இந்தியாவின் கர்நாடகாவில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு இன்று மருத்துவராகி சாதனை படைத்துள்ளார் சுபாஷ் துகாராம் பாட்டீல்.
கர்நாடகாவின் பூசாகா கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் துகாராம் பாட்டீல், கடந்த 2002ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் MBBS பயின்று வந்துள்ளார்.
அதற்காக மகாலட்சுமிபுரத்தில் தங்கி படித்து வந்த சுபாசுக்கும், அருகே வசித்த பத்மாவதி என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதுதெரிந்து பத்மாவதியின் கணவர் கண்டிக்க, ஆத்திரத்தில் பத்மாவதியின் கணவரை சுபாஷ் கொலை செய்தார்.
இதுகுறித்த வழக்கில் சுபாஷ்க்கு 14 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது, சிறையில் இருந்த போதும் படிக்கும் ஆர்வம் குறையாமல் இருந்த சுபாஷ் முதுகலை இதழியல் பட்டம் பெற்றார்.
2015ம் ஆண்டு விடுதலையான சுபாஷ் மருத்துவ படிப்பை தொடர எண்ணி, ராஜிவ் காந்தி சுகாதாரம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து பேசினார்.
அவரும் அனுமதியளிக்க வெற்றிகரமாக படிப்பை முடித்து சமீபத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பட்டமும் பெற்றுள்ளார்.
தன்னை விட 18 வயது குறைவான மாணவர்களுடன் எவ்வித சங்கடமும் இன்றி வெற்றிகரமாக படித்து முடித்த சுபாசுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.