ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் மே மாதம் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜப்பானில் நடைபெறும் சர்வதேச மாநாடொன்றிலும் அவர் பங்குபற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் டோக்கியோவில் எதிர்வரும் மே மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் ஆசியாவின் எதிர்காலம் என்ற சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்கென தெற்காசியாவில் இருந்து முதல் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்த ஜப்பானிய தூதுவர் அஹிரா சுகியாமோ, தமது நாட்டிற்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த விஜயம் வெற்றிகரமானதாகவும் ஆக்கபூர்வமானதாகவும் அமையும் என்பதை தமது அரசாங்கம் உறுதிப்படுத்தும் எனவும் ஜப்பான் தூதுவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் இரண்டு நாட்கள் நடைபெறும் ஆசியாவின் எதிர்காலம் என்ற சர்வதேச மாநாட்டில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த அரசாங்கத் தலைவர்கள், வர்த்தக நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் கல்வியியலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
பிராந்தியத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான தமது தூரநோக்கங்கள் குறித்து அவர்கள் தமது கருத்துக்களை இந்த மாநாட்டில் முன்வைப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1995 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த மாநாட்டில் வடகிழக்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகள் குறித்தே அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ஸவின் ஜப்பானுக்கான விஜயத்தை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வது தொடர்பில் இரண்டு நாட்டு அரசாங்கங்களும் கவனம் செலுத்தியுள்ளன.
இந்தவிஜயத்தின் போது ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயுடன் நேருக்கு நேரான சந்திப்புக்களிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
அத்துடன் ஜப்பானிலுள்ள வர்த்தக சமூகம் மற்றும் ஊடகங்களையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்துதருவதாகவும் ஜப்பான் தூதுவர் சுகியாமா உறுதியளித்துள்ளார்.
தேசிய தொலைக்காட்சியை டிஜிட்டல் மயமாக்குவது , கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு நுழைவாயில் மற்றும் முன்னெமொழியப்பட்டுள்ள திரவ இயற்கை எரிவாயுத் திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதியுடன் ஜப்பான் தூதுவர் கலந்துரையாடியுள்ளார்.