மல்லாகம் நீதிமன்றில் கஞ்சா சரை கைமாற்றிய இருவர் கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மல்லாகம் நீதிமன்றில் மோதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்ட வழக்கு அழைக்கப்பட்டது. அந்த வழக்கில் இரண்டு சந்தேக நபர்கள் பிறிதொரு வழக்கில் விளக்கமறியலில் உள்ள நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தரால் எதிரிக்கூண்டில் முற்படுத்தப்பட்டனர்.
அந்த வழக்குடன் தொடர்புடைய மேலும் சிலர் ஏற்கனவே பிணையில் வெளிவந்த நிலையில் முற்பட்டனர்.
தெல்லிப்பளை பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பில் திறந்த மன்றில் விசாரணைகள் இடம்பெற்றவேளை எதிரிக்கூண்டில் நின்ற சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில் உள்ள சந்தேக நபருக்கு கஞ்சா சரை ஒன்றை கைமாற்றியுள்ளார்.
சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் இந்த செயற்பாடு அவதானிக்கப்பட்ட நிலையில் மன்றிடம் முன்வைக்கப்பட்டது.
கஞ்சா போதைப்பொருளை நீதிமன்றிற்கு எடுத்துவந்த சந்தேக நபரை கடுமையாக எச்சரித்த மன்று அவர் மீது தனியான வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் நீதிமன்றிற்கு வருபவர்கள் பொலிஸாரால் வாயில் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படும் நிலையில் சந்தேக நபரால் எவ்வாறு கஞ்சா சரை எடுத்துவரப்பட்டது என்று விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிட்ட மன்று பொலிஸாரையும் கண்டித்தது.