நவ கிரகங்கள் மனதையும் உடலையும் ஆள்கின்றன. எனவேதான் உடல்நிலையோ மனநிலையோ சரியில்லை என்றால் ஜாதகத்தை கையில் எடுக்கிறோம். அதிக கடன் தொல்லையால் சிக்கி தவிக்கும் போதும் ஜாதகம் பார்ப்பதற்கு ஜோதிடரிடம் போகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் அறம் வீடு எனப்படும் 1,5,9ஆம் வீடுகளான தர்ம திரிகோண அமைப்பில் அமரும் கிரகங்களைப் பொறுத்து நமக்கு வருமானம் வருகிறது.
திரிகோண பாவகங்களைப் பற்றியும், எந்த திரிகோணத்தில் எந்த கிரகம் அமர்ந்தால் என்ன பாதிப்பு வரும் என்றும் பார்க்கலாம். முதலில் 1,5,9 ஆம் இடங்கள் அறம். இது தர்ம திரிகோணம். 2,6,10 பொருள் இது கர்ம திரிகோணம் அமைப்பு. 3,7,11 இன்பம் இதுதான் காம திரிகோண அமைப்பு. 4,8,12 இது வீடு எனப்படும் மோட்ச திரிகோணம் அமைப்பு.
இதில் ஒவ்வொரு திரிகோண பாவகங்களையும் அதன் முந்தைய திரிகோண பாவகங்கள் கெடுக்கும். அறத்தை மோட்சமும் பொருளை அறமும், இன்பத்தை பொருளும், மோட்சத்தை காம திரிகோண அமைப்பும் கெடுக்கக் கூடியவை. அறம், பொருள், இன்பம்,வீடு என நான்கு திரிகோண அமைப்புகள் இருந்தாலும் பதவி, பணம், சொகுசு வாழ்க்கை அமைய ஒவ்வொருவருக்கும் 1,5,9 ஆம் பாவக திரிகோண அமைப்பில் அமரும் கிரகங்களைப் பொறுத்தே கிடைக்கும்.
புகழும் பெருமையும் வரும்
ஒருவரின் ஜாதகத்தில் லக்னம் எனப்படும் 1ஆம் வீடு, பூர்வ புண்ணியம் எனப்படும் 5ஆம் வீடு பாக்ய ஸ்தானம் எனப்படும் 9ஆம் வீட்டில் ஆட்சி பெற்ற கிரகங்கள் இருந்தால் அரசு உயர் பதவி சொகுசு வாழ்க்கை அமையும். அதுவே உச்சம் பெற்ற கிரகங்கள் அமர்ந்தால் அரசனுக்கு இணையான வாழ்க்கை அரசியலில் அழியாத புகழ் கிடைக்கும். நட்பு, சமன் என்ற நிலையில் மூன்றிலும் கிரகங்கள் இருந்தால் நல்ல வாய்ப்புகள் தானாக தேடி வரும். முயற்சிக்கு கை மேல் பலன் கிடைக்கும். அதே நேரம் பகை, நீசம் பெற்ற கிரகங்கள் இருந்தால் வாழ்க்கையே போராட்டமாக அமையும். கடின உழைப்பால் மட்டுமே தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
உழைப்பாளிகள்
1, 5, 9ஆம் வீடுகளில் சுப கிரகங்கள் இருந்தால் வெற்றிகரமான வாழ்க்கை அமையும். நினைத்ததை சாதிக்க முடியும். இந்த இடங்களில் எந்த கிரகமும் இல்லாமல் இருந்தால் உழைப்பிற்கு உரிய உயர்வு மட்டுமே வரும். லக்னத்தில் மட்டும் கிரகங்கள் இருந்தால் சொந்த உழைப்பில் முன்னேற்றம், நண்பர்கள், மனைவி மூலம் உதவிகள் பெற்று உயர்வு அடைவார்கள்.
அப்பா வழியில் பணம்
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மட்டும் கிரகங்கள் இருந்தால், முன்னோர் சொத்துகள் வாயிலாகவோ தங்களின் குழந்தைகள் மூலமாகவோ, அவர்களின் சுயபுத்தியினாலோ உயர்வு அடைவார்கள். பாக்ய ஸ்தானத்தில் மட்டும் கிரகங்கள் இருந்தால் சேவை செய்வதன் மூலமாகவோ, தந்தை வழியாகவோ, கடின உழைப்பாலோதான் உயர்வு கிடைக்கும்.
எந்த கிரகம் எப்படி பணம் வரும்
1, 5, 9 ஆம் வீடுகளில் சூரியன் நின்று இருந்தால், அரசு வகையிலும், அரசியல், பொதுக் காரியங்கள், விசுவாசமான நபர்கள் மூலம் ஆதாயம் உயர்வு கிடைக்கும். சந்திரன் நின்று இருந்தால், தாய் வழியில் சொத்துகள், பெண்கள் வழியில் வருமானம், தன் சுய உழைப்பாலும் உயர்வு வரும். செவ்வாய் இருந்தால், அரசு வகையில் ஆதாயம், பூமியோகம், முயற்சிக்குத் தகுந்த பலன்கள் கிடைக்கும். புதன் இருந்தால், தொழிலில் வெற்றி கிடைக்கும். கணக்கு, எழுத்து வேலைகள் மூலம் ஆதாயம் வரும்.
முன்னோர் சொத்துக்கள்
1, 5, 9 ஆம் இடங்களில் குரு இருந்தால், கோயில், பொதுச் சேவை, வங்கி மூலம் ஆதாயம், பைனான்ஸ், முன்னோர் சொத்துகள் மூலம் சுகமான வாழ்க்கை அமையும். 1, 5, 9ஆம் இடங்களில் சுக்கிரன் இருந்தால், கலைகளில் வருமானம், புகழ், பெண்கள் மூலம் ஆதாயம், திடீர் லாட்டரி யோகம், எதிர்பாராத அதிர்ஷ்டம், பிறரது பணம் வந்து உயர்வு தரும்.
திடீர் பணவரவு
1, 5 , 9 ஆம் இடங்களில் சனி இருந்தால் வாழ்க்கையே பலவிதமான போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். எதுவும் அவ்வளவு எளிதாக அமையாது. நினைப்பது எதுவும் நடக்காமல் போனாலும், நடப்பது யாவும் நன்மைக்கே அமையும். 1, 5 ,9 ஆம் இடங்களில், ராகு, கேது இருந்தால் திடீரென வாழ்க்கை முன்னேற்றம் அடையும்.