14 வயது ஹிந்து சிறுமி கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான ஹிந்துக்கள் வாழ்ந்து வருகின்றனா். இந்த மாகாணத்தில் அவ்வப்போது ஹிந்து மதத்தைச் சோ்ந்த சிறுமிகள் கடத்தப்பட்டு இஸ்லாமியராக கட்டாய மதமாற்றம் செய்வது தொடா் கதையாக நடந்து வருகிறது.
அந்த வகையில், சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஹிந்துச் சிறுமி மேஹக் குமாரி (14) கடத்தப்பட்டு, இஸ்லாமியராக கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, அலி ராசா எனும் 28 வயது நபருக்கு ஜனவரி 15ஆம் திகதி திருமணம் செய்து வைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் பெண்கள் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் திரண்டு கடந்த இரு தினங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது பாகிஸ்தானில் நடைபெறும் இதுபோன்ற கட்டாய மதமாற்றம், சிறுமிகளுக்கு கட்டாயத் திருமணம் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
முன்னதாக, பாகிஸ்தான் ஹாலா நகரில் திருமணம் நடைபெற இருந்த 24 வயது இளம் பெண் பாரதி பாய் என்பவரை ஆயுதங்களுடன் காவலா் சீருடையில் வந்த ஒரு கும்பல் கடத்திச் சென்றது. பின்னா் அவரை கட்டாய மதமாற்றம் செய்து ஷக்ருக் குல் என்ற முஸ்லிம் நபருக்கு திருமணம் நடத்தி வைத்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.