கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி அங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த சீனப் பெண் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த சீனப் பெண் இன்று வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான நிகழ்வு இன்று காலை ஐ.டி.எச் வைத்தியசாலையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் நடைபெற்றது.
புத்தர் சிலைக்கு முன்பாக அமைச்சருடன் வந்து பூஜை செய்த சீனப் பெண் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வரை சுகாதார அமைச்சின் விசேட வாகனத்தில் சென்று அங்கிருந்து அவர் நாடு திரும்புகின்றார்
சீனாவின் ஹுபெய் மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு வந்த 43 வயதான சீனப் பெண் கடும் காய்ச்சல் காரணமாக அங்கொடை தொற்று நோயியல் பிரிவில் கடந்த மாதம் 25ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
இரத்தப் பரிசோதனையின் மூலம் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அவர் தொடர்ச்சியாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் அவர் இன்று வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படுவார் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.