லண்டனிலிருந்து உங்களை முதன்மைப்படுத்தும் குழுவினர் இப்படியான கேள்விகளை கேட்கிறீர்களோ தெரியவில்லை. நிதி தொடர்பான சந்தேகம் எழுந்தால் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். காலம் வரும்போது, அந்த தரப்பினரின் பெயர் விபரங்களை வெளியிடுவோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசர் க.சுகாஷ்.
மாகாணசபையை நிராகரித்து நடந்த போராட்டமே தமிழீழ விடுதலைப் போராட்டம். அந்த மாகாணசபையின் ஊடாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவது, மாகாணசபையை ஏற்பதை போல ஆகிவிடும். அதனாலேயே தனியாக நினைவேந்தலை நடத்தினோம் என்றும் தெரிந்தார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை நேற்று வறுத்தெடுத்த விக்னேஸ்வரனிற்கு பதிலடி கொடுக்க, இன்று முன்னணியால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜி.ஜி.பொன்னம்பலம் எந்த காலத்திலும் ஒற்றையாட்சி யாப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆதரிக்கவுமில்லை. ஒற்றையாட்சி சோல்பரி யாப்பை எதிர்த்துத்தான் 1948இல் ஜி.ஜி. போட்டியிட்டார். அதனால்தான் 70 ஆண்டுகாலமாக ஒற்றையாட்சியை எமது கட்சி எதிர்க்கிறது என்று சொல்லி வருகிறோம். அமிர்தலிங்கம், மாவை சேனாதிராசா ஆகியோரை ட்ரயல் அட்பார் வழக்கில் ஆஜராகி மீட்டது ஜி.ஜி. வட்டுக்கோட்டை தமிழீழ தீர்மானமும் காங்கிரஸ், தமிழரசு கட்சியின் இணக்கத்துடன் வெளியானது.
காங்கிரசின் யாப்பில் சமஷ்டியை தாண்டியதும். அது ஒற்றையாட்சிக்கு உட்பட்டதல்ல. யாப்பின் பிரதியை விக்னேஸ்வரனுக்கு தருகிறோம். படித்து பாருங்கள். மாகாணசபை அமைச்சர் ஒருவரை தெரிந்தோ, தெரியாமலோ சட்டத்திற்கு மாறாக நீக்கி, நீதிமன்றத்தில் நிற்கிறீர்கள். மீண்டும் மீண்டும் சட்டரீதியான தவறு செய்வது உங்கள் ஆளுமையை கேள்விக்குட்படுத்தும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி ஒற்றுமையை முதலில் சீர்குலைத்தது யார் என கேட்டிருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன நோக்கத்திற்காக உருவாகக்ப்பட்டதோ, அந்த நோக்கத்தை விட்டு தடம்புரண்டபோது, அந்த நோக்கத்திற்காகவே எமது கட்சியை உருவாக்கினோம். தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு முதலில் வெளியேறியது, இப்பொழுது விக்னேஸ்வரனுடன் உள்ள, சிறிகாந்தா, சிவாஜிலிங்கம்தான். அவர்கள் கூட்டமைப்பை விட்டு வெளியேறுவதும், இணைவதுமான மூன்று தடவைகள் செயற்பட்ட பின்னர் இப்பொழுது விக்னேஸ்வரனுடன் உள்ளனர்.
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு திட்டத்தில் தமிழ் தேசம் என வரும் இடங்களில் அதையெல்லாம் வெட்டி அகற்றியுள்ளார். தமிழ் தேசம், இறைமையை ஏற்பதாக விக்னேஸ்வரன் சொன்னதன் அடிப்படையில்தான் நாம் பேரவைக்குள் வந்தோம். பின்னர், தேசத்தை ஏற்க மாட்டேன் என நீங்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் உள்ளது. தேசத்தை ஏற்க மாட்டேன் என அவர் சொன்னதால்தான் நாம் வெளியேறினோம்.
பல்கலைகழக மாணவர்களின் சமரச முயற்சியை நாம் குழப்பியதாக சொல்கிறார். இடைக்கால அறிக்கையின் அடிப்படையில்தான் பல்கலைகழக மாணவர்களின் தீர்வு திட்டத்தை நகர்த்தப் போவதாக சுமந்திரன் சொன்னார். இடைக்கால வரைபை நிராகரிக்க நாம் கோரினோம். ஆனால் விக்னேஸ்வரன், சுமந்திரன் எடுத்த நிலைப்பாட்டையே எடுத்தார். அப்போது, சுமந்திரனுக்கும், உங்களிற்கும் வித்தியாசம் காண முடியவில்லை.
இடைக்கால வரைபை ஏற்காவிட்டாலும், எதிர்க்க வேண்டியதில்லையென சொல்லியுள்ளீர்கள். எதிர்க்காவிட்டால், ஏற்பதாகத்தானே அர்த்தம். நீங்கள் அதை மறுக்கலாம் என்பதால், நீங்கள் சொன்னதன் ஒலிப்பதிவை வெளியிடுகிறோம். (ஒலிப்பதிவு வெளியிடப்பட்டது)
லண்டனிலிருந்து உங்களை முதன்மைப்படுத்தும் போது இப்படியான கேள்விகளை கேட்கிறீர்களோ தெரியவில்லை. நிதி தொடர்பான சந்தேகம் எழுந்தால் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். காலம் வரும்போது, அந்த தரப்பினரின் பெயர் விபரங்களை வெளியிடுவோம்.
மாகாணசபையை நிராகரித்து நடந்த போராட்டமே தமிழீழ விடுதலைப் போராட்டம். அந்த மாகாணசபையின் ஊடாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவது, மாகாணசபையை ஏற்பதை போல ஆகிவிடும்.
நவம்பர் மாதம் 12ம் திகதி 2017ஆம் ஆண்டு நீங்கள் இணைத்தலைவராக இருக்கும் தமிழ் மக்கள் பேரவையில், இருவரும் ஒன்றாக தேர்தலில் போட்டியிடுவதில் இணக்கம் கண்டோம். ஈ.பி.ஆர்.எல்.எவ் சின்னத்திலும் போட்டியிட தயாராக இருந்தோம். ஆனால், இந்தியாவிற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் சென்று வந்ததும், ஆனந்தசங்கரியுடன் கூட்டு வைத்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பை விட மோசமான ஆனந்தசங்கரியுடன் சேர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் உடன் சேர்வது எப்படி? நீங்கள் எம்மையும், ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பையும் ஒற்றுமைப்படுத்த ஏதாவது செய்தீர்களா?
இரண்டாவது எழுக தமிழில் நாம் குழப்ப முயன்றதாக விக்னேஸ்வரன் சொல்லியுள்ளார். ஐயா இந்த பிழை விட்டிருக்க மாட்டார். அறிக்கையை எழுதிக் கொடுத்தவர்கள் பிழை விட்டிருக்க வேண்டும். இரண்டாவது எழுக தமிழ் மட்டக்களப்பில் நடந்தது. முதலாவது எழுக்க தமிழில் கலந்து கொள்ள மாட்டேன் என விக்னேஸ்வரன் சொல்லி, பாணந்துறைக்கு காரில் புறப்பட்டார். ஐயா சனம் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளது என சொன்ன பின்னரே காரை திருப்பிக் கொண்டு வந்தார்.
இரண்டாவது எழுக தமிழில், ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற பிரதிநிதிகளாக உள்ள, இடைக்கால அரசியலமைப்பிற்கான குழுவில் உள்ள சித்தார்த்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ரெலோ போன்ற கட்சிகளை மேடையில் வைத்துக் கொண்டு எப்படி, நாம் எழுக தமிழை நடத்துவது? மக்களை ஏமாற்றுவதாக அமையாதா? நாம் உங்களை போல மக்களை ஏமாற்றும் அரசியல் செய்யவில்லை.
நானும், மணிவண்ணனும் ஜெட் விங் ஹொட்டலில் சீன பிரதிநிதியை சந்தித்ததாக சொல்லியுள்ளார். அப்படி சந்திக்கவில்லை. சீன பிரதிநிதியை சந்தித்தால் என்ன தவறு? நாம் அரசியல் கட்சி. அரசியல் கட்சிகள் இராஜதந்திரிகளை சந்திப்பதில் என்ன பிழை?
கோட்டாவுடன் ஒப்பந்தம் செய்து, தனது சகோதரரை விடுவித்ததாக கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார். இதை திட்டமிட்டு பலர் சொல்வதுண்டு. கஜேந்திரனின் தம்பியை விடுவித்தது, அமெரிக்க தூதர் ரொபர்ட் ஓ பிளேக்கின் தலையீட்டால். இது குறித்து விக்லீக்ஸில் வெளியான பகுதியை வாசித்து காட்டுகிறேன் (ரொபார்ட் ஓ பிளேக்கின் விக்கிலீக்ஸ் தகவலை வாசித்து காட்டுகிறார்.)
அவர் விடுவிக்கப்பட்டதும், நன்றி தெரிவிக்க சென்றது கோட்டாபாயவிடமல்ல. அமெரிக்க தூதரிடம்.
தலைவர் பிரபாகரனினால் மன்னிப்பளிக்கப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைக்கப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ், உள்ளூராட்சிசபை தேர்தலில் துரோகி ஆனந்தசங்கரியுடன் இணைந்து, ஒற்றையாட்சிக்கு ஆணை கேட்டுள்ளனர். தேர்தலின் பின்னர் வவுனியாவில் மஹிந்த அணியுடன் இணைந்து சபைகளை கைப்பற்ற முயன்றது யார்? இப்படியானவர்களுடன் இணையும்படி எம்மை வலியுறுத்துவது சரியா?. கடத்தி, கப்பம் பெற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பிற்கு ஒரு சிலரின் தூண்டுதலால் வெள்ளளையடிக்க முயல்வது கேவலமானது.
ஒற்றையாட்சியை ஏற்று, பௌத்தத்திற்கு முன்னுரிமையை ஏற்றுக்கொண்டுள்ள உங்களிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையில் வித்தியாசம் தெரியவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைக்க மாட்டோம் என்றால், எதற்கு மாற்றுத் தலைமை என வேடமிடுகிறீர்கள்? தேர்தலில் வென்றால், தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து செயற்படுவதாக கூறியிருக்கிறீர்கள். அப்படியென்றால், எதற்கு கூட்டமைப்பை விட்டு வெளியில் வந்து போட்டியிடுகிறீர்கள்?
சிங்கள சம்மந்தி வாசுதேவவுடன் மஹிந்த முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து மண்டியிட்டது யார்? விடுதலைப் புலிகள் அமைப்பினர் இரத்தக்கறை படிந்தவர்கள் என சொன்னது யார்?