ஜெயலலிதாவுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அன்று முதல் பரபரப்பானது மருத்துவமனை மட்டுமல்ல அங்கிருந்த ஊழியர்களும்தான். குறிப்பாக ஜெயலலிதாவுக்கு பணிவிடை செய்த செவிலியர்கள்.
அப்போலோ மருத்துவமனை செவிலியர்கள் மூன்று ஷிப்ட்டில் பணியாற்றி வருகின்றனர்.
காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும், நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரையும், இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரையும் அவர்கள் பணி தொடர்கிறது. மருத்துவமனையின் 2 ஆவது தளத்தில் உள்ள MDCCU வார்டில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்.
பணி நேரத்தில் மூன்று செவிலியர்கள் அவருக்கு பணிவிடை செய்து வந்துள்ளனர். இரண்டு செவிலியர்கள், ஜெயலலிதா அருகில் நின்று கொண்டே கவனித்து வந்தனர். ஒரு செவிலியர், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருந்துகள் குறிப்பு எடுத்துக் கொள்வார்.
இரவுப் பணி முடிந்து செல்லும் செவிலியர்கள், காலை பணிக்கு வரும் செவிலியர்களிடம், ஜெயலலிதாவுக்கு இந்த வகையான சிகிச்சையும், மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
இனி அவருக்கு அளிக்கப்பட உள்ள சிகிச்சை, மருந்துகள் குறித்து விளக்கம் அளித்துச் செல்வார்கள். அனுமதிக்கப்பட்ட முதல் மூன்று நாட்களில் ஜெயலலிதா சற்றே கடுமையாக நடந்து கொண்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் செவிலியர்கள் பணிவிடை செய்து கொண்டிருந்தபோது, ஜெயலலிதா வலியால் துடித்துள்ளார். இதனால் பதறிப் போன செவிலியர்கள், பணிவிடை செய்வதை நிறுத்தி விட்டனர். “வலி தாங்க முடியவில்லை. ஏதேனும் செய்யுங்கள்!” என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
ஒருமுறை காலை பணியில் இருக்கும் செவிலியர்கள், அன்று கொடுக்கப்பட வேண்டிய மருந்துகள், பணிவிடைகள் குறித்து ஜெயலலிதாவிடம் கூறியுள்ளனர். அப்போது, Don’t disturb me. I want to take rest என்று கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கையால் சில நேரங்களில் ஜெயலலிதா மருந்துகள் கூட எடுக்காமல் இருந்துள்ளார்.
இது குறித்து மருத்துவர்களிடம், செவிலியர்கள் கூறியுள்ளனர். அவருக்கு மருந்து கொடுக்க வேண்டியது உங்களது கடமை என்று மருத்துவர்கள் கண்டிப்புடன் கூறியுள்ளனர்!” என்கிறார்கள் மருத்துவமனை வட்டாரத்தில்!