விடுதலைப் புலிகள் அமைப்பினரின் நோக்கங்களுக்கு அமையவே அமெரிக்கா இராணுவ தளபதிக்கு பயணத்தடை விதித்துள்ளது. இந்த நெருக்கடியை இராஜதந்திர மட்டத்தில் வெற்றிக் கொள்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கையின் 30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல. நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்காகவே இராணுவ தளபதி சவேந்திர சில்வா யுத்த வெற்றிக்கு பாரிய பங்களிப்பினை வழங்கினார்.
பலதரப்பட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அமெரிக்காவிற்கு மனித உரிமை தொடர்பில் கருத்துரைக்கும் தகுதி கிடையாது.
30 வருட கால யுத்தம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது அல்ல.
உலகில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பினை முற்றாக இல்லாதொழிக்க வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு காணப்பட்டது. இது சாதாரண விடயம்.
ஒரு நாட்டின் இறையான்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அமைப்புக்களுக்க எந்த நாடுகளும் ஆதரவ வழங்காது. இதில் இலங்கை மாத்திரம் விதிவிலக்கல்ல.
விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கங்களைக் கருத்திற் கொண்டு அமெரிக்கா இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு பயணத்தடையினை விதித்துள்ளது.
பல மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அமெரிக்காவின் மீது சுமத்தப்பட்டுள்ளன. ஆகவே எமது நாடு தொடர்பில் தீர்மானங்களை தன்னிச்சையாக எடுக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு கிடையாது.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மீதும் இதுவரையில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் எவ்வித முன்னறிவித்தல், பேச்சுவார்த்தகைளுமின்றி அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளமை கடுமையான கண்டனத்திற்குரியவை. இந்த நெருக்கடியை அரசாங்கம் வெற்றிக் கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.