முன்னாள் வடக்கு முதலமைச்சர் விக்னேஸவரனின் உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பான கருத்தை நாம் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஒரு குழுவினர், எமது போராட்டத்தை ஆதாரம் இல்லாது கொச்சை படுதினால் அவருக்கு எதிராக போராடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த குழுவின் தலைவி சுகந்தி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நீதியரசர் விக்னேஸ்வரன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கஜேந்திரகுமார் பிரித்தாள்வதாக அண்மையில் கூறியதனூடாக எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பு மீது கட்சி சாயம் பூசி சிறிலங்கா அரசின் ஓஎம்பிக்குள் முடக்க எத்தனிக்கிறாரா?
தமிழர்களை காணாமலாக்கிய ஒட்டுக்குழுக்களை ஒன்றாக்கி ஒட்டுக்குழுக்களின் கூட்டணி அமைத்திருக்கும் விக்கினேஸ்வரனுக்கு எம்மையும், எமது போராட்டத்தையும் எப்படிப் புரிந்து கொள்ள முடியும். திரு விக்கினேஸ்வரன் நீதியரசர் என்ற பெயரை வைத்துக்கொண்டு நீதிக்கும், நேர்மைக்கும் உண்மைக்கும் எதிரான கருத்தை வெளிகொண்டு வருவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
எமது போராட்டத்தை கஜேந்திரகுமார் பிரித்தாள்கின்றார் என்றால் அதற்கான ஆதாரங்களை விக்னேஸ்வரன் வெளிப்படுத்த வேண்டும்.
எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தி நீதி வேண்டி போராடி வருகின்றது
ஓ.எம்.பியை வெளியேறக்கோரி தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம்.
எமது அமைப்பு கடந்த பெப்ரவரி 4 திகதி அன்று இலங்கை சுதந்திர தினத்திற்கு எதிராக கறுப்பு கொடிகளை தாங்கி போராடி எமது எதிர்ப்பை வெளியிட்டோம். இவ்வாறு தூய்மையான போராட்ட அமைப்பின் மீது அரசியல் சாயத்தை பூசி அதை இல்லாமல் ஒழிக்க விக்னேஸ்வரன் முயற்சிக்கிறாரா?
கனகரஞ்சினி உள்ளிட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கம் ஓ.எம்.பி யை ஆதரித்து அவர்களுடன் பல தடவை ரகசிய பேச்சுக்களை நடத்தி யாழில் ஓ.எம்.பியைத் திறக்க வழி கோலிவிட்டு இலங்கை அரசாங்கத்திடம் நீதியை கோரி வருகின்றனர்.
அரசிடம் நீதியை கோருகின்ற தரப்புக்கு விக்கினேஸ்வரன் ஆதரவா ?
என்ற கேள்வி எம் மத்தியில் எழுந்துள்ளது. எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு ஐநா பாதுகாப்புச்சபை ஊடாக நீதியை வலியுறுத்தி போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது. இதனை அரசியல் சாயத்தை பூசி இல்லாமல் ஒழித்து கோத்தா அரசை பாதுகாக்க விக்னேஸ்வரன் முயற்சிக்கிறாரா?
நாம் ஓ.எம்.பியை வெளியேற கோரி தொடர் போராட்டத்தை மேற்கொண்டு இன்றுடன் 162 ஆவது நாளை கடந்துள்ள நிலையில் திரு விக்னேஸ்வரன் இது வரைக்கும் எமது போராட்ட கொட்டகைக்கு வந்து ஏன் இதில் இருக்கிறீங்கள்?எதற்க்காக இருக்கிறீர்கள்? என்று கூட கேட்காத விக்னேஸ்வரன் தனது கட்சி லாபத்திற்காக வாக்கு வேட்டைக்காக எமது தூய்மையான போராட்டத்தை கொச்சைப்படுத்த முயல்கிறார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்தை சிறிலங்கா அரசு பிரித்தாழ்கிறது என்பது விக்கினேஸ்வரனுக்குத் தெரியாத விடயமல்ல? அல்லது தெரியாது போல் நடிக்கிறாரா?
தமிழின அழிப்பிற்கான நீதியை சொகுசான வாழ்க்கைக்காகவும்,தமது அரசியல் இருப்பிற்காகவும் விலைபேசி விற்ற கூட்டமைப்புப் போன்று கூட்டணி அமைத்து கும்மாளம் போட்டு தமிழர் தேசத்தை கூறுபோடும் விக்னேஸ்வரனின் உண்மை முகம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
இனிவரும் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடுதலை வேண்டி உறவுகளின் வலி சுமந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடிந்தால் வரலாம் இல்லையேல் எமது போராட்டம் பற்றி வாய் திறக்கக்கூடாது.இல்லை கதைப்பேன் என நினைத்து எம்மைச் சீண்டினால் நீதியரசருக்கெதிராகவும் எமது போராட்டம் திரும்பும்.என்பதினை அறியத்தருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவினர் வெளிநாட்டிலுள்ள குழுவினரின் வழிநடத்தலில் இயங்குவதாக அண்மையில் இன்னொரு குழு பரபரப்பு தகவல்களை வெளியிட்டிருந்ததும், இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தியவர் தமது கட்சியின் உதவியை பெற்றவர் எனவும் அண்மையில் ஈ.பி.டி.பி தரப்பு புகைப்படங்களை வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.