ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்தர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்கா விதித்த பயணத் தடைக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கடந்த ஐக்கிய தேசியக் கட்சியே அடிப்படைக் காரணம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியிருக்கின்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் – ஜே.வி.பியும் இணைந்து ஆதரவளித்து ஆட்சிபீடம் ஏற்றிய ரணில்-மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியதாலேயே ஸ்ரீலங்கா படையினருக்கு எதிராக போர்க் குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆத்திரம் வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்கா பயணத் தடை விதித்து ஒருவாரம் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா எவ்வாறான போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை செய்தார் என்று தெரியாமலும், ஆதாரங்கள் இன்றியும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக அமெரிக்கா பயணத் தடையை விதித்திருப்பதாக பிரதமர் மஹிந்த குற்றம்சாட்டியுள்ளார்.
எந்தவொரு குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படும் வரை சம்பந்தப்பட்ட நபர் நிரபராதியே என்று அறியப்பட வேண்டும் என்பது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அந்த நடைமுறை ஸ்ரீலங்கா இராணுவத் தளபதிக்கும் அவரது குடும்பத்தினர் விடையத்திலும் பின்பற்றப்படவில்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்தின் எதேட்சாதிகாரமான இந்தப் பயணத் தடைக்கு எதிரான ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கண்டனத்தை வெளிவிவகார அமைச்சு நேரடியாக தெரியப்படுத்தியிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஆட்சிபீடம் ஏறிய ரணில் – மைத்ரி அரசாங்கத்தின் இணை அனுசரணையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா தொடர்பில் கொண்டுவரப்பட்ட 30 இன் கீழ் ஒன்று தீர்மானம் காரணமாகவே ஸ்ரீலங்கா படையினருக்கு எதிராக இவ்வாறு வேறு நாடுகளினால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் பாரிய அளவில் சுமத்தப்படுவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி உள்ளிட்ட அரச படைத் தளபதிகளுக்கு எதிரான வெளிநாடுகள் முன்னெடுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றி அதனை பாதுகாத்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும ஏனைய தரப்பினரும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
ஜெனீவா தீர்மானத்தின் முதலாவது பிரிவிலேயே ஸ்ரீலங்கா படையினருக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய நிபுணர்கள் குழு தயாரித்த அறிக்கையை வரவேற்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் ஐ.நா செயலாளர் நாயகத்தினால் உத்தியோகபற்றற்ற ரீதியிலேயே மூவரடங்கிய குழு அமைக்கப்பட்டதாகவும் கூறும் மஹிந்த, அவ்வாறான நிலையில் குறித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட போரின் பின்னர் ஸ்ரீலங்கா படை மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி உள்ளிட்டோர் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த 30 இன் கீழ் ஒன்று என்கிற தீர்மானத்திலிருந்து விலகுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்கா விதித்துள்ள இந்த பயணத்தடையானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டுத் தண்டனையளிக்கப்படும் முறையை நினைவுபடுத்துகின்ற போதிலும் நல்லாட்சி கூண்டில் இருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே இல்லை என்றும் பிரதமர் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
இந்த பயணத்தடையை நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வது தற்போதைய அரசாங்கத்தின் கடமையாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்திருப்பதன் ஊடாக 2015 ஆம் ஆண்டு அவர்கள் செய்த மிகப்பெரிய காட்டிக் கொடுப்பை மறைப்பதற்கான கூற்றாகவே அதனை தான் பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு மிகப் பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே அமெரிக்கா தேர்தல் நெருங்கிவரும் சூழலில் பயணத் தடையை விதித்திருப்பதாக ஜே.வி.பி கூறியுள்ளதன் ஊடாக அமெரிக்காவின் பயணத் தடையை அவர்களும் மறைமுகமாக வரவேற்றிருப்பதாகவும் மஹிந்த குற்றம் சாட்டியுள்ளார்.
நல்லாட்சிக் காலத்தில் மேற்குலக நாடுகளின் சக்திகளை எதிர்ப்பதாக நாடகம் ஆடிய ஜே.வி.பி இன்று இராணுவத் தளபதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எதிராக அமெரிக்கா விதித்துள்ள பயணத் தடையை குறைந்த பட்சம் கண்டனம் தெரிவிக்கவும் இல்லை என்பதையும் நாட்டு மக்கள் நன்கு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாடு மற்றும் மக்கள் குறித்து சிந்திக்கும் தேசப்பற்று சிந்தனையுடைய சக்திகள் இருக்கின்ற அதேவேளை தேசத்தை காட்டிக் கொடுக்கும் சந்தர்ப்பம் வரும்வரை காத்திருக்கும் தேசத்துரோக சக்திகளும் இருப்பதை இந்தப் பயணத் தடையின் ஊடாக அடையாளம் காணமுடிந்துள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மேலும் தெரிவித்துள்ளார்.