மேலதிக அறவீடுகள் மற்றும் தற்போதைய வரி விகிதங்களை அதிகரிப்பதனை நிறுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அனைத்து உள்ளூராட்சி மன்ற வரி விகிதங்கள் மற்றும் கட்டண பொறிமுறைகளை ஆராய்ந்து நேற்று முதல் 30 நாள்களுக்குள் அவற்றை இலகுபடுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்புரையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர, அனைத்து ஆளுநர்களுக்கும் பிரதம செயலாளர்களுக்கும் இதனை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
நாட்டின் அனைத்து வரி மற்றும் வரி அல்லாத கட்டண முறைகளை இலகுபடுத்துவதற்கு அரசு முயற்சிக்கின்றது.
மக்கள் வாழ்க்கையை இலகுபடுத்தல், கொடுக்கல், வாங்கல் செலவீனத்தை குறைத்தல், ஊழல், மோசடிகளை தடுத்தல் மற்றும் சிறிய நிறுவனங்கள் முதல் பெரியளவிலான தொழில்முயற்சிகள் வரை வர்த்தக நடவடிக்கைகளுக்கு பொருத்தமான சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட இலக்குகளை அடைந்துகொள்வது இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசின் அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் அதற்கு அடிப்படையான வழிமுறைகளை கட்டுப்படுத்தும், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பல்வேறு வரிகள் மற்றும் கட்டண அறவீடுகள் விரிவுபடுத்தப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் அவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களினால் விதிக்கப்பட்டுள்ள வரிகள் மற்றும் கட்டண அறவீடுகளுக்கு மாற்றமாக மக்கள் வாழ்க்கையை இலகுபடுத்தக்கூடிய எளிமையான, வெளிப்படையான மற்றும் கட்டுப்படியாகக்கூடிய கட்டண அறவீடுகளை அறிமுகப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஆளுநர்களுக்கு அறிவித்துள்ளார்.
பன்முகப்படுத்தப்பட்ட நிர்வாக அலகுகளின் வருமான தேவைகளை அரசு ஏற்றுக்கொள்வதோடு, நிதி பரவலாக்கம் மற்றும் வருமானங்களைப் பகிரும் முறைமை தேசிய கொள்கை கட்டமைப்புடன் ஒத்துப்போக வேண்டுமெனவும் கலாநிதி ஜயசுந்தர சுட்டிக்காட்டினார் – என்றுள்ளது.