வடமாகாணத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மற்றும் படையினருக்கான காணி அபகரிப்புக்களால் விழுங்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுடைய நிலங்கள் தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்றை வடமாகாணசபை ஜனாதிபதிக்கு விரைவில் கையளிக்க உள்ளதாக கூறியிருக்கும் வடமாகாண முதலமைச்சர் அறிக்கை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கின்றார்.
கடந்த மாதம் 22ஆம் திகதி கொழும்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா – வடமாகாண முதலமைச்சர் சீ. வி.விக்னேஸ்வரன் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது.
குறித்த சந்திப்பில் வடமாகாணத்தில் இடம்பெற்றிருக்கும், இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பு தொடர்பாக பேசப்பட்டதா? என முதலமைச்சரிடம் நேற்று கேட்டபோதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதியுடனான சந்திப்பில் தமிழ் மக்களுடைய காணி பிரச்சினைகள் தொடர்பாகவும் விசேடமாக கலந்துரையாடியுள்ளேன்.
குறிப்பாக முல்லைத்தீவு எல்லை கிராமங்கள், கேப்பாபிலவு, மற்றும் யாழ்ப்பாணம் வலி,வடக்கு, மயிலிட்டி போன்ற பகுதிகள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருக்கின்றேன். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசும் போது பல விடயங்கள் அவரால் விளங்கி கொள்ள முடியாமல் இருக்கின்றது.
காரணம் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பான முழுமையான தகவல்கள் அவருக்கு தெரியாமல் இருக்கின்றது. அதேபோல் நாங்களும் இவ்வாறான பிரச்சினைகளை சுட்டிக்காட்டி கடிதங்களை எழுதும்போது அவற்றின் பிரதிகளை ஜனாதிபதிக்கும் அனுப்பிவைக்கிறோம்.
பெரும்பாலும் பிரதிகளை அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க மாட்டார்கள். எனவே இந்த பிரச்சினைகள் தொடர்பாக ஒரு விரிவானதும், முழுமையானதுமான அறிக்கையினை தனக்கு தயாரித்து வழங்குங்கள் என ஜனாதிபதியே கேட்டிருக்கின்றார்.
அதற்கமைய நான் வடமாகாணம் திருப்பியவுடன் மேற்படி பிரச்சினைகள் தொடர்பாக விரிவானதும், முழுமையானதுமான அறிக்கை ஒன்றை எங்களுடைய அதிகாரிகளைக் கொண்டு தயாரிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கின்றேன்.
அதில் சில காணி பிரச்சினைகள் தொடர்பாக முழுமையான விளக்கங்களையும் கொடுக்க தீர்மானித்துள்ளோம்.
குறிப்பாக நாம் கேப்பாபிலவு கிராமம் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசும்போது வடமாகாணசபை மேற்படி பிரச்சினைக்கு தீர்வினை காண்பதற்கு ஒரு குழுவை அமைத்து அறிக்கை பெற்றிருக்கின்றது.
அதன்படி படையினர் தற்போது நிலை கொண்டிருக்கும் மக்களுடைய நிலத்தை விட்டு தென்மேற்கு பக்கமாக பின் நகர்ந்தால் சுமார் 2 ஏக்கர் நிலத்தில் அவர்கள் முகாம்களை அமைத்து கொண்டு வாழலாம்.
ஆனால் அதனை செய்யாமல் படையினர் தொடர்ந்தும் மக்களுடைய நிலங்களிலேயே இருக்கின்றார்கள். என விளக்கமளித்துள்ளேன். ஆனால் அந்த விடயம் ஜனாதிபதிக்கு முழுமையாக விளங்கவில்லை. அந்த விடயம் தொடர்பான தகவல்கள் அவரிடம் இல்லை. எனவே முழுமையான தகவல்கள் மற்றும் விளக்கங்களுடன் ஒரு அறிக்கை தயாரிக்கப் பட்டு ஜனாதிபதியிடம் விரைவில் சமர்பிக்கப்படும்.
என்னுடைய பார்வையின்படி இவ்வாறான பிரச்சினைகளை ஜனாதிபதியுடன் பேசுவதன் ஊடாக எதிர்காலத்தில் தீர்த்து கொள்ளலாம். அதனை நான் நம்புகிறேன் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.