ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில், சஜித் அணியினருக்கும் ரணில் அணியினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் அணியை சேர்ந்த வஜிர அபேவர்தனவும் பாலித்த ரங்கே பண்டாரவும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானை சின்னத்திலேயே போட்டியிடவேண்டும் என வலியுறுத்தினர்.
இதனால், செயற்குழுவில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
பொதுத் தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென கட்சியின் ஆலோசனைக் குழு தீர்மானித்துள்ள நிலையில், யானை சின்னத்தில் போட்டியிடவேண்டும் என இவ்விருவரும் வலியுறுத்தியதால் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
எனினும், அன்னம் சின்னத்திலேயே போட்டியிட இறுதியில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்பின்னர் அதுதொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதன்போது அளிக்கப்பட்ட சட்ட விளக்கத்தால், அன்னம் சின்னத்தை பயன்படுத்துவதில் சிக்கல் நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
சஜித் பிரேமதாச தலைமையிலான ” ஐக்கிய மக்கள் சக்தி” என்ற அரசியல் கூட்டணி அன்னப்பறவை சின்னத்தை பயன்படுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று அனுமதி வழங்கிய போதும் தேர்தல் ஆணைக்குழுவின் சட்டமொன்றால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
இன்றைய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ,ஜனநாயக தேசிய முன்னணி ,ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றின் செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு சென்று பேச்சு நடத்தினர்.
இதன்படி அன்னப்பறவை சின்னத்தை வேறு கட்சி ஒன்றிலிருந்து பெற்றாலும் மீண்டும் அந்த சின்னத்துக்குரிய சொந்தக் கட்சி மீண்டும் ஐந்து வருடங்களின் பின்னரே பயன்படுத்தலாமென சட்டம் இருப்பதாக இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அன்னப்பறவை சின்னத்திற்கு உரித்துடைய சொந்தக்கட்சி விரும்பாத காரணத்தினால் சஜித் பிரேமதாஸ தலைமையிலான அரசியல் கூட்டணி இந்த சின்னத்தை பயன்படுத்துவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இதயம் சின்னத்தை பயன்படுத்த அனுமதி கோரி அது கிடைக்காமல் அன்னப்பறவை சின்னத்தை பயன்படுத்த எல்லா தரப்பினதும் இணக்கப்பாட்டை சஜித் அணி பெற்றபோதும் தேர்தல் ஆணைக்குழுவின் இந்த சட்டத்தையடுத்து புதிய சவாலை எதிர்கொண்டுள்ளது.
இதனால் சஜித் அணி ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தின் கீழ் போட்டியிடும் தெரிவே எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது