மத ரீதியில் அரசியலில் ஈடுபட்டு வன்முறைகளை தோற்றுவிக்காது பாதுகாக்க வேண்டியது ஆன்மீகத் தலைவர்களின் கடமை. எனவே மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக பிரிவினையை ஏற்படுத்துவதை தடுக்க வேண்டியது ஆன்மீகத் தலைவர்களின் கடமை என மன்னார் நகர சபை உறுப்பினர் செல்வக்குமரன் டிலான் தெரிவித்தார்.
மன்னார் நகர சபையின் 24 ஆவது அமர்வு இன்று வியாழக்கிழமை (20) காலை 10.30 மணியளவில் இடம் பெற்றது.
மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம்பெற்ற குறித்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நகரசபை உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் அரசியல் ரீதியாகவே தெரிவு செய்யப்பட்டு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களாகவே மக்களுக்கு சேவையாற்ற வந்துள்ளோம்.
நாங்கள் அரசியல் தெரியாத, அரசியல் விடயங்களில் ஈடுபடவில்லை என யாரும் கூற முடியாது.
அரசியலில் ஈடுபடுவது அனைத்து மக்களுக்கும் பொருத்தமான ஒரு விடையம்.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் இது வரை காலமும் அரசியல் ரீதியாக எந்த பிரச்சினைகளும் ஏற்படவில்லை. இனியும் நடக்க கூடாது.
யாராக இருந்தாலும் எக் கட்சியினூடாகவும் அரசியலில் ஈடுபட முடியும். மன்னார் மாவட்டத்தில் ஆன்மீகம் என்ற ரீதியில் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் காணப்படுகின்றது.
அந்த வகையில் ஆன்மீகம் என்ற ரீதியில் அரசியல் செய்கின்ற போது பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றது.
ஆன்மீகத் தலைவர்கள் சரியான முறையில் உணர்ந்து மகக்ளுக்கு இடையிலும், மதங்களுக்கு இடையிலும் குழப்பங்களை ஏற்படுத்தாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என ஆன்மீக தலைவர்களிடம் மன்னார் நகர சபை உறுப்பினர் என்கின்ற வகையில் பணிவான வேண்டுகோளை முன்வைக்கின்றேன்.
அரசியலில் யாரும் ஈடுபடலாம். இரு மதங்கள் ரீதியாக அரசியலில் ஈடுபட்டு வன்முறைகளை தோற்றுவிக்காது பாதுகாக்க வேண்டியது மத தலைவர்களின் கடமை.
அரசியல்வாதிகள் அரசியலை செய்யட்டும். ஆன்மீகவாதிகள் ஆன்மீகத்தில் ஈடுபடட்டும். ஆன்மீக வாதிகள் அரசியலில் ஈடுபட முடியாது என்று இல்லை.
அவர்கள் ஆன்மீகத்தையும், அரசியலையும் மக்களை குழப்பத்திற்கு உள்ளாக்காமல் மேற்கொள்ள வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.