சென்னை ஐ.ஐ.டியில் பாத் ரூமில் ஆடைகளை களைந்த மாணவியை தண்ணீர் குழாய் வழியே படம் பிடித்ததாக இணைப் பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
நாடு முழுவதும் இருந்து வந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் இந்த கல்லூரியில் தற்கொலைகள் தொடர்கதையாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட கேரளத்தைச் சேர்ந்த ஒரு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்றிரவு ஏரோ- ஸ்பேஸ் ஆய்வகத்தில் பயிற்சியில் இருந்த மாணவி ஒருவர் இரவு 8.30 மணிக்கு கழிவறைக்கு சென்றிருக்கிறார்.
அங்கே உடைகளைக் களையும் போது அவருக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டு சுற்றிலும் பார்த்த போது கழிவறைக்கு தண்ணீர் வரும் குழாய் வழியாக யாரோ செல்ஃபோனால் படம் பிடிப்பதைப் பார்த்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து அவர் கூச்சல் போட்டு மற்ற மாணவர்களை உதவிக்கு அழைத்திருக்கிறார். அவர்கள் ஓடிவந்து பக்கத்து கழிவறையில் பதுங்கி இருந்த ஏரோ-ஸ்பேஸ் துறையின் இணைப் பேராசிரியர் சுபம் பேனர்ஜியை செல்ஃபோனும் கையுமாகப் பிடித்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட மாணவி அவருடைய செல்ஃபோனை வாங்கி பார்த்தபோது அதில் அவர் உடைகளைக் களையும் காட்சி இருந்திருக்கிறது. அந்த மாணவி அதை அழித்தபோது மேலும் பல மாணவிகளின் ஆபாசப் படங்கள் அந்த ஃபோனில் இருந்தது தெரிய வந்திருக்கிறது. ஆனால், சுபம் பேனர்ஜி அந்த மாணவியிடம் இருந்து தனது ஃபோனை வாங்கி மற்ற ஆபாசப்படங்களையும் அழித்துவிட்டாராம்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அவரைத் தாக்க முயன்று இருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து அந்த மாணவியின் புகாரின் பேரில் கோட்டூர் புரம் போலீசார் சுபம் பேனர்ஜியை கைது செய்திருக்கிறார்கள்.
போலீஸ் விசாரணையில் சுபம் பேனர்ஜி ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இங்கு இணைப் பேராசிரியராகப் பணிபுரிவதாகவும், அத்துடன் ஏரோ-ஸ்பேஸ் துறையில் பி.ஹெச்.டி படித்து வருவதாகவும் தெரிய வந்திருக்கிறது.