கன்னியகுமரி மாவட்ட எல்லையில் இருக்கிறது பாறசாலை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பாஸ்கர். விவசாய தொழில் பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமாக நிலங்களும் மாடுகளும் இருக்கின்றன. பாஸ்கர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று சினையாக இருந்து வந்தது. அதை பாஸ்கர் முறையாக கவனித்து பராமரித்து வந்தார்.
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பாக சினையாக இருந்த பசுமாடு கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றது. கன்றை பார்த்த பாஸ்கரும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். புதியதாக பிறந்த கன்றுக்குட்டிக்கு இரண்டு தலைகள், நான்கு கண்கள், இரண்டு நாக்குகள் என சாதாரணமாக பிறக்கும் குட்டியில் இருந்து வேறுபட்டு காணப்பட்டது. இதுகுறித்து பாஸ்கர் கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த கால்நடை மருத்துவர்கள், பராமரிப்பு அதிகாரிகள் கன்றுக்குட்டியை பரிசோதித்தனர்.
மரபணு மாற்றங்களே இதுபோன்ற வித்தியாசமான பிறப்பிற்கு காரணம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். கன்றுக்குட்டி முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதிசய தோற்றத்துடன் கன்றுக்குட்டி பிறந்த தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியது. இதையடுத்து ஏரளாமானோர் திரண்டு வந்து அதைபார்வையிட்டு செல்கின்றனர்.