சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது திருமணத்தை தள்ளிவைத்த மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது.
இந்த வைரஸ் பாதிப்பிற்கு 2236 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், வைரஸ் பாதிப்பு அதிகமாக பரவியுள்ள வுகான் நகரில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர்.
இந்நிலையில், வுகான் நகரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவர் பெங் யூன்ஹுவா (29) கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளார்.
பெங் யூன்ஹுவா கடந்த ஜனவரி மாத இறுதியில் திருமணம் செய்துகொள்வதாக இருந்தது. அதற்காக திருமண அழைப்பிதழ்கள் உள்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவைத்திருந்தார்.
ஆனால் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவேண்டும் என்ற நோக்கில் தனது திருமணத்தை ஒத்திவைத்திருந்தார்.
ஆனால், நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த அவருக்கும் கொரோனா ஏற்பட்டது.
இதையடுத்து ஜின்யன்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பெங் யூன்ஹுவா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.