நோயாளிகளை விமானம் மூலம் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
திடீர் விபத்துக்களில் சிக்குவோருக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஹெலிகொப்படர்களை பயன்படுத்தலாம் எனவும் கூறியுள்ளார்.
கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் காணப்படும் இந்த முறைமை இலங்கையிலும் அமுல்படுத்துவது குறித்து பிரதமரிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதிக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போன்ற வாகன நெரிசல் அதிகம் காணப்படும் நாட்டில் இந்த திட்டம் பொருத்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் சிக்குவோருக்கு முதல் ஒரு மணித்தியாலத்தில் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் மிகவும் முக்கியமானவை எனவும் உரிய நேரத்தில் வைத்தியசாலைகளில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதன் மூலம் உயிர்களை காப்பாற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச வைத்தியசாலைகளில் 28 அவசர சிகிச்சை பிரிவுகள் புதிதாக உருவாக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வீதிப் போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகை அதிகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளின் ஊடாக திடீர் விபத்துக்களின் எண்ணிக்கையை 30 வீதத்தினால் குறைக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னதெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.