குள்ளமாக இருப்பதால் தன்னை எல்லோரும் கிண்டல் செய்வதால் தன்னை கொன்றுவிடுங்கள் என்று அவுஸ்திரேலியாவின் 9 வயது சிறுவன் குவான்டன் பலஸ் கண்ணீர்விட்டு அழும் காட்சியை அவரின் தாய் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த வீடியோ பகிரப்பட்டபின் சிறுவன் குவான்டன் பலஸுக்கு ஆதரவு குவியத் தொடங்கியது. ஏராளமானோர் அவருக்கு உதவியும் அளித்து வருகின்றனர்.
இதில் குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவு குயின்ஸ்லாந்தில் நடந்த ஓல்-ஸ்டார் அணிக்கும், நியூஸிலாந்து மாரியோஸ் அணிக்கும் இடையிலான ரக்பி போட்டியில் சிறுவன் குவான்டன் பலஸை வழிநடத்தச் சொல்லி வீரர்கள் அழைத்து மரியாதை செலுத்தினர்.
இதுதொடர்பான புகைப்படம் சமூக ஊடகத்தில் வெளியானவுடன் ஏராளமானோர் சிறுவனுக்கு ஆதரவு தெரிவித்து, வாழ்த்தி வருகின்றனர்.
ரக்பி விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வமாக இருக்கும் சிறுவன் குவான்டன் பலஸ், தன்னுடைய ஆதர்ஷ் ரக்பி வீரர்களுடன் களத்துக்கு வந்ததால் மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்றான்.
என்ன நடந்தது?
அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த யாரகா பல்ஸ். இவரின் 9 வயது மகன் குவான்டன். சிறுவன் குவான்டன் குள்ளமாக இருப்பதால் வகுப்பில் சக மாணவர்கள் அவனை ஏளனம் செய்தும் துன்புறுத்தியும் வந்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை பாடசாலையில் இருந்து குவான்டனை அவரின் தாய் காரில் அழைத்து வரும்போது, காரில் அமர்ந்து கொண்டு சிறுவன் குவான்டன் கண்ணீர் விட்டு அழும் காட்சியை வீடியோவா சமூக வலைதளத்தில் தாய் வெளியிட்டிருந்தார்.
அதில், அந்த சிறுவன் குவான்டன் பலஸ், “அம்மா எனக்கு ஒரு கயிறு கொடுங்கள் . நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். எனது இதயத்தில் கத்தியால் குத்திக்கொள்ள விரும்புகிறேன். என்னை யாராவது கொன்றுவிட வேண்டும் என விரும்புகிறேன்” எனத் தனது தாயிடம் தேம்பித் தேம்பி அழுதான்.
இதுகுறித்து சிறுவனின் தாய் யாரகா பல்ஸ் தனது பதிவில், குவாடனின் உயரத்தைக் கேலி செய்யும் வகையில் அவன் தலையில் ஒரு மாணவன் தட்டுவதை நானே நேரில் பார்த்தேன். நான் பாடசாலையில் புகார் செய்து பிரச்சினை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக காரில் ஓடிவந்து ஏறிய அவன், பிறகு தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கிவிட்டான்.
ஒரு தாயாக எனது பொறுப்பிலிருந்து நான் தவறிவிட்டதாகக் கருதுகிறேன். நமது கல்வித் திட்டமும் தோல்வி அடைந்துவிட்டதாகவே கருதுகிறேன். சக மாணவர்களைக் கேலி செய்வதால் எத்தகைய விளைவு ஏற்படும் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள் என்று பிற பெற்றோர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு அவர் வேண்டுகோள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குவாடனின் வீடியோவை அவனது தாயார் பகிர்ந்து கொண்ட பிறகு அச்சிறுவனுக்கு ஆதரவு பெருகியது. 2 கோடி முறைக்கு மேல் இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது.