விராட் கோலி களத்தில் நிலைத்து நின்றுவிடக் கூடாது என்பதற்காகவே பௌன்சர் பந்துகளைப் பயன்படுத்தியதாக டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ரொஸ் வென்ற நியூஸிலாந்து கப்டன் கேன் வில்லியம்ஸன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 348 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 183 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து, இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் இந்திய அணி இன்றைய 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 25 ரன்களுடனும், விஹாரி 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் இந்தியக் கப்டன் விராட் கோலியை நிலைக்க விடாமல் பொறி வைத்து வீழ்த்திய நியூசிலாந்து, இரண்டாவது இன்னிங்ஸிலும் கோலியை சொல்லியடித்தது.19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். போல்ட் வீசிய பௌன்சர் பந்தில் ஆட்டமிழந்தார் கோலி.
இந்நிலையில், நியூஸிலாந்தின் முதன்மை வேகப்பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் விராட் கோலி விக்கெட் குறித்து தெரிவிக்கையில்,
“இந்திய அணியில் இருக்கும் சிலரைப் போல விராட் கோலியும் பந்தை மட்டையில் எதிர்கொள்வதை விரும்புவார். அவர் பந்துகளை நன்றாகவே அடித்து, பவுண்டரிகளைப் பெற்றார். நிச்சயமாக நாங்கள் அதைத் தவறவிட்டோம். எங்களுடையப் பார்வையில் நாங்கள் அதைக் நிறுத்துவதற்கு முயன்றோம்.
என்னைப் பொறுத்தவரை அவருடைய ரன் குவிக்கும் வேகத்தைக் கட்டுப்படுத்த, கிரீஸைப் பயன்படுத்தி ஷோர்ட் பந்துகளை வீச முயற்சிப்பது நல்ல திட்டமாக இருந்தது” என்றார்.
முன்னதாக, இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு கோலி குறித்து பேசிய டிரென்ட் போல்ட், “தனிப்பட்ட முறையில் விராட் கோலி போன்ற வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ய விரும்புவேன். அதன்மூலம், என்னை நான் பரிசோதித்துக்கொள்ள முடியும். ஆனால், அவர் தலைசிறந்த வீரர். அவர் எந்த அளவுக்குச் சிறப்பான வீரர் என்பது அனைவரும் அறிந்ததே” என்றார்.