சமீபத்தில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது எதிர்பாராத வகையில் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக பலியாகினர் என்பதும் ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த விபத்து தமிழ் சினிமாவுலகை அதிர்ச்சி அடைய செய்த நிலையில் தற்போது இதுகுறித்து ‘இந்தியன் 2’ பட தயாரிப்பு நிறுவனத்திற்கு கமல்ஹாசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
மிகுந்த மனவேதனையுடன் நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். பிப்ரவரி 19 அன்று நடைபெற்ற சம்பவங்களை இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை. நம்முடன் சிரித்துப் பேசி, பழகி, பணியாற்றிய சிலர் இப்போது உயிருடன் இல்லை.
இந்த விபத்து நடந்த இடத்திலிருந்து சில மீட்டர்கள், நிகழ்ந்த கணத்திலிருந்து சில நொடிகள் தான் நான் தள்ளி இருந்தேன். மயிரிழையில் உயிர் தப்பினேன். என்னுடைய வேதனையை வார்த்தைகளில் வடிக்க முடியாது. படப்பிடிப்பில் கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். இதுபோன்ற விபத்துகள் படப்பிடிப்புக் குழுவினரின் நம்பிக்கையைக் குலைக்கும். என்ன விபத்து ஏற்பட்டாலும் அதற்கான இழப்பீடு முழுமையாகவும் உடனடியாகவும் வழங்கப்படவேண்டும்.
காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சையும் அவர்களின் குடும்பத்தினருக்கு முழு ஆதரவையும் வழங்கவேண்டும். பண ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும்.
எந்தவொரு படப்பிடிப்பையும் தொடங்கும் முன்பு பாதுகாப்பு அம்சங்கள் சரியாக உள்ளனவா என்று பரிசோதிக்க ஒரு நடைமுறையை உருவாக்கவேண்டும். இதன்மூலம் நான் உள்பட படப்பிடிப்புக் குழுவினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி படப்பிடிப்புக்குத் திரும்ப வழி செய்ய வேண்டும்’ இவ்வாறு கமல்ஹாசன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.