காதலியை சந்திப்பதற்காக இளைஞர் ஒருவர் மாங்காய் குடோன் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் காவல்துறையினரை அதிர வைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் தாண்டிக்குடி சாலையில் அழகர் பொட்டல் குடியிருப்பு பகுதியில் உள்ள மாங்காய் குடோனில் நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே விரைந்து வந்த வத்தலக்குண்டு தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதையடுத்து, புகாரின் பேரில் பட்டிவீரன்பட்டி பொலிசார் நடத்திய விசாரணையில் மாங்காய் குடோன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக கிடைத்த சிசிடிவி காட்சிகளை கொண்டு வாலிபர் ஒருவர் பெட்ரோல் பங்கில் பெட்ரோலை பாட்டிலில் வாங்கிக்கொண்டு அருகில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்கு செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜாங்கம் என்ற அந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், அழகர் நகர் பொட்டல் குடியிருப்பில் குடியிருக்கும் தனது காதலியை சந்திப்பதற்காக செல்லும்போது மற்றவர்கள் கவனத்தை திசை திருப்ப மாங்காய் குடோன் மீது பெட்ரோல் குண்டு வீசியதாகவும் குடோன் கூரை தீப்பிடித்த வேலையில் அனைவரும் வெளியே வந்து தீயை அணைக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் போது தனது காதலியை சந்தித்ததாகவும் கூறியுள்ளார்.
இதனால் பொலிசார் வழக்குப்பதிவு செய்து ராஜாங்கத்தை சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.