பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் புதிய அரசாங்கம் மேற்கொண்ட மாறுபட்ட அணுகுமுறை குறித்து கவலையடைகின்றேன் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன,
“ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தால் இணை அனுசரணை வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 30/1, 34/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களில் இருந்து விலகுவதாக” அறிவித்திருந்ததுடன், போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இலங்கையின் இந்த முடிவு தொடர்பில் முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்த மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட், மற்றொரு ஆணைக்குழுவை நியமிப்பது என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை நிராகரித்தார்.
இதன்பின்னர் நேற்று இரவு 7.30 மணியளவில் உரையாற்றிய அவர்,
“பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் புதிய அரசாங்கம் மேற்கொண்ட மாறுபட்ட அணுகுமுறை குறித்து கவலையடைகின்றேன். அரசாங்கம் அனைத்து மக்களுக்காகவும் அனைத்து சமூகத்தினது தேவைகளுக்காகவும் செயற்பட வேண்டும். குறிப்பாக சிறுபான்மையினர் குறித்து செயற்பட வேண்டும்.
கடந்த சில வருடங்களாக ஏற்பட்டுள்ள அனுகூலமான முன்னேற்றத்தை இல்லாதொழிக்க வேண்டாம் என நான் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றேன். இலங்கையின் சுயாதீன நிறுவனங்கள் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் பலப்படுத்தப்பட்டமை ஜனநாயகக் கட்டமைப்பின் முக்கிய அம்சமாகும்.
சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பூட்டும் பேச்சு, பாதுகாப்பு மற்றும் கொள்கை ரீதியிலான நடவடிக்கைகள் அளவுக்கு அதிகமாகவே இடம்பெறுகின்றன. பொறுப்புக்கூறலின் உள்ளக நடவடிக்கை கடந்த காலத்தில் தோல்வியடைந்துள்ளது. இதற்கான விசாரணைகளுக்காக மற்றுமொரு ஆணைக்குழுவை நியமிப்பதில் நம்பிக்கை கொள்ள முடியாது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படுவதே அதன் பெறுபேறாக அமையும். இலங்கையின் அனைத்து சமூகத்தினருக்கு எதிராகவும், கடந்த காலங்களைப் போன்று மீண்டும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. இந்த நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு நான் பேரவையை வலியுறுத்துகின்றேன்” என்றார்.