இருமல் மற்றும் காய்ச்சலுடன் இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இரு இலங்கையர்களை IDH மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இலங்கை திரும்பிய இருவருக்கும் விரிவான மருத்துவ சோதனை முன்னெடுக்கப்படும் எனவும், அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளனவா என்பதையும் உறுதி செய்யப்படும் என IDH மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை அன்று கூடிய கொரோனா வைரஸ் தொடர்பான தேசியக் குழு, கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான நாடுகளான இத்தாலி, தென் கொரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பல இலங்கையர்கள்,
விடுமுறை நாட்களை கழிக்க இலங்கைக்கு திரும்பும் வாய்ப்பு உள்ளதால், அது தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் விவாதித்துள்ளது.
தென் கொரியாவில் மட்டும் கொரோனா வியாதிக்கு இதுவரை 2,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் நேற்று ஒருநாளில் மட்டும் சுமார் 256 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
மொத்தம் 13 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 10 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேப்போன்று இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 655 பேர் இலக்காகியுள்ளனர்.
16 பேர் இதுவரை மரணமடைந்துள்ள நிலையில், சுமார் 60 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.