வட மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொங்கிறீட் பனல் பொருத்து வீட்டு தொகுதிகளின் முதல் மூன்று மாதிரி வீடுகள் மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (28) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான காதர் மஸ்தானினால் அடிக்கல் நாட்டி அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது.
‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கின்’ திட்டத்தின் கீழ் உள்ளூரில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை முன் னோக்கிச் செல்லும் வகையில் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.
ஒரு வீடு தலா 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் 650 சதுர அடிகளைக் கொண்டதாக அமையப் பெறுகின்றன.
அதற்கமைவாக முசலி பிரதேசச் செயலாளர் பிரிவிலுள்ள பொற்கேணி, ஹீனைஸ் நகர், சவேரியார் புரம் ஆகிய 3 கிராமங்களிலும் தலா ஒரு வீடுகள் வீதம் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் முசலி பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகள், பயணாளிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.