மலேசியாவின் 8வது பிரதமராக டான்ஸ்ரீ மொகிதின் யாசினை அந்த நாட்டு மாமன்னர் நியமித்துள்ளார். இன்று (1) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு மொகிதின் யாசினுக்கான பதவிப் பிரமாணம் நடைபெறும் என்றும் அரண்மனை அறிவித்துள்ளது.
மாமன்னரின் அரண்மனைக் காப்பாளர் நேற்று சனிக்கிழமை (29) மாலை வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்ட எல்லாக் கட்சிகளின் தலைவர்களிடம் இருந்தும், சுயேச்சையாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும், அடுத்த பிரதமருக்கான வேட்பாளருக்கான நியமனங்களைப் பெற்றதாகவும், இது மாமன்னர் கடந்த இரண்டு நாட்களில் நடத்திய நேர்காணல்களின் தொடர்ச்சியான ஒரு நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆவணங்களின் அடிப்படையில் பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறார் எனத் தான் நம்புவதாகவும் மாமன்னர் தெரிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து மொகிதின் யாசினை பிரதமராக நியமிப்பதாகவும் அவருக்கான பதவி நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சியும், பதவிப் பிரமாண நிகழ்ச்சியும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் அரண்மனையில் நடைபெறும் என்றும் மாமன்னரின் அரண்மனைக் காப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் அனைவரும் விரும்பும் இந்த நாட்டின் மக்களின் நலன்களுக்காகவும், அரசாங்கம் ஒன்று அமைய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தும் பிரதமர் நியமனத்தை இனியும் காலம் கடத்த முடியாது என்றும் மாமன்னர் கருதுகிறார் எனக் குறிப்பிட்டிருக்கும் அரண்மனைக் காப்பாளர், நாட்டில் நீடித்து வரும் அரசியல் குழப்பங்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் அனைத்துத் தரப்புகளுக்கும் இதுவே சரியான முடிவான அமையும் எனவும் மாமன்னர் கருதுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கும், அனைத்துத் தரப்புகளுக்கும் குறிப்பாக எல்லா அரசாங்க இலாகாக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் மாமன்னர் கூறியுள்ளார்.