உலகளவில் கடுமையான அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து செல்போன்களும் தப்பவில்லை என தெரியவந்துள்ளது.
சீனாவில் உருவான இந்த உயிர்க்கொல்லி வைரஸ் உலகம் முழுவதிலும் 40 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது.
இந்த நோயால் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நோயின் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் சீனாவுடனான வர்த்தக தொடர்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
அதேபோல் இந்தியாவும் தன்னுடைய வர்த்தக தொடர்பை நிறுத்தி வைத்துள்ளது. அந்த வகையில், இந்தியா முழுவதும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சந்தையில் சீனாவின் செல்போன்களுக்கு எப்பொழுதும் தனி வரவேற்பு இருந்து வந்த நிலையில் இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் சீனாவை சேர்ந்த செல்போன்களை வாங்குகின்றனர்.
இந்நிலையில், சீனாவில் இருந்து செல்போன்கள் எதுவும் வராததால் இந்திய சந்தையில் உள்ள புதிய மொடல் செல்போன்கள் அனைத்தும் ஆயிரம் முதல் 5000 வரை விலை உயர்ந்துள்ளது. மேலும், கையிருப்பு தீர்ந்தால் செல்போன்களை எவ்வாறு பெறுவதென்று தெரியாமல் வழி தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
POCO செல்போன்கள், ஒரு மாதத்திற்கு மட்டுமே இருப்பில் உள்ளன. இதேபோல் சியோமி, ஹூவேய், விவோ ஆகிய பிராண்டுகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிகிறது.
கொரோனா பாதிப்பால், சீனாவில் ஐபோன்களின் உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் மிகக்குறைந்த நேரமே ஆப்பிள் ஷோரூம்கள் திறக்கப்படுகின்றன. ஆப்பிள் நிறுவனம், 4-ம் காலாண்டு வருவாய் 4,82,000 கோடி ரூபாய் என்று இலக்கு நிர்ணயம் செய்திருந்தது.
இதில் 15 சதவிதம், அதாவது சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் சீனாவில் இருந்து கிடைக்கும் வருவாய். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக ஐபோன் விற்பனை குறைந்து, ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியாது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறுபுறம் சாம்சங் நிறுவனம், தனது உதிரி பாகங்களை, கப்பல் மற்றும் விமானம் மூலம் வியட்னாமிற்கு அனுப்பி அங்கு உள்ள தொழிற்சாலைகளில் செல்போன் உற்பத்தியை அதிகரித்துள்ளது. 2017-ம் ஆண்டில் சாம்சங் மூலம் வியட்நாமிற்கு 4,17,00,000 ரூபாய் வருவாய் கிடைத்தது.
ஆப்பிள் போன்களின் விற்பனை குறையத் தொடங்கும் என்று தகவல்கள் வெளியான நிலையில், சாம்சங் நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரிக்க முழு முயற்சி மேற்கொண்டுள்ளது. வியட்னாமில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், அதற்கு குறைந்த வட்டியிலோ அல்லது வட்டியே இல்லாமலோ கடன் வழங்கத் தயாராக இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
இதற்காக சாம்சங் தரப்பில், 15,500 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இருப்பினும் சீனாவில் தயாரிக்கப்படும் GALAXY S20 SERIES உள்ளிட்ட சில ரக போன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது.
ஜியோமி நிறுவனமும் கொரோனா வைரஸ் பிரச்சனையால், செல்போன் மற்றும் உதிரி பாகங்களின் உற்பத்தியை குறைந்துள்ளது. இதன் காரணமாக ஜியோமி போன்களின் விலையும் அதிகரிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.