இலங்கைத் தமிழரிற்கு சொந்தமான லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile network) தனது ஸ்பெயின் நாட்டின் தொலைத்தொடர்பு வலையமைப்பை விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் மிகப்பெரிய பொதுத் தொலைத்தொடர்பு நிறுவனமாகப் பட்டியலிடப்பட்டுள்ள Masmovil நிறுவனம், லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஸ்பெயின் நிறுவனத்தை, இலங்கை ரூபாய் 76 பில்லியன் பெறுமதியில் கொள்வனவு செய்துள்ளது.
2010ஆம் ஆண்டு ஸ்பெயினில் தொலைத்தொடர்பு சேவையை லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile) ஆரம்பித்தது.
இதன்மூலம் 1.5 மில்லியன் பாவனையாளர்களைத் தன்னகத்தே கொண்ட பிரமாண்டமான MVNO சேவையைக் கொண்ட நிறுவனமாக லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile) உருவெடுத்தது.
இதுவே ஸ்பெயினின் மாஸ்மோவில் (Masmovil) நிறுவனம், லைக்கா நிறுவனத்தின் ஸ்பெயின் வலையமைப்பைக் கொள்வனவு செய்வதற்கு ஏதுவாக அமைந்தது.
இந்தப் பரிவர்த்தனை குறித்து லைகா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தெரிவிக்கையில், “நாங்கள் ஸ்பெயினுக்குள் நுழைந்தபோது, நாட்டின் மிகப் பெரிய MVNO ஐ அதிஉயர் தரமான சேவையாகவும் குறைந்த கட்டணத்திலான தொலைத்தொடர்புச் சேவையாகவும் கட்டியெழுப்ப வேண்டும் என்றே கனவு கண்டோம். அந்தக் கனவு நனவாகி இப்போது அந்த பணியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்” என்று கூறினார்.
“இதன் மூலம் ஸ்பெயினில் லைக்கா தொலைத்தொடர்புச் சேவையை மாஸ்மோவில் (Masmovil) நிறுவனம் கொள்வனவு செய்வதென்பது, லைக்காவின் உலகளாவிய வெற்றியை உறுதிப்படுதிப்படுத்தி உள்ளது.
“அத்துடன் மாஸ்மோவில் (Masmovil) நிறுவனம், லைகா மொபைல் இலட்சினையை (Brand) நீண்ட காலத்துக்குத் தக்கவைத்துக் கொள்ள இணங்கியிருப்பது, லைக்காவின் நிறுவனத்தின் பெருமிதமாகவும் கொள்ளப்படுகின்றது” என்றும் அவர் கூறினார்.
லைக்கா நிறுவனம் தொடர்ந்தும் உலக அளவில் 23 நாடுகளின் தொலைத்தொடர்புச் சந்தைகளில் பிரமாண்ட செயற்பாட்டை தக்கவைத்துள்ளதுடன், புதிய நாடுகளில் தனது சேவையை விரிவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.
ஸ்பெயின் நிறுவனத்தை விற்பனை செய்த அதேநேரம், உகண்டாவிலும் தனது புதிய வலையமைப்பை லைக்கா ஆரம்பித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும், பின்னரும் அவர்களிற்கு நிதியுதவியளித்த விமர்சனம் லைக்கா மீது வைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.