கொழும்பு தேவி பாலிகா வித்தியாலய மாணவிகளிற்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் மனைவி பெங் லியுவான் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கொரோனா வைரஸிற்கு எதிரான சீனாவின் போராட்டத்திற்கு உந்துசக்தி வழங்கிய அவர்களின் முயற்சிக்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை இந்த கடிதம், தேவி பாலிகா வித்யாலயத்திற்கு அனுப்பப்பட்டதாக சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மையில், தேவி பாலிகா மகாவித்தியாலயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 43 மாணவிகள் கொரோனாவிற்கெதிரான சீனாவின் போராட்டத்தை ஓவியமாக வரைந்து, சீனாவிற்காக பிரார்த்தித்து சீன ஜனாதிபதியின் மனைவிக்கு அதை அனுப்பி வைத்தனர்.
இதற்கான பதில் கடிதத்தையே அனுப்பி வைத்துள்ளார். சீனா, அதன் மக்களுடன் ஒன்றுபட்டு, தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், அவற்றின் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு முயற்சிகள் சாதகமான முடிவுகளைத் தருவதாகவும் பெங் கூறினார்.
தொற்றுநோயை வெல்லும் நம்பிக்கை, திறன் மற்றும் உறுதியை சீனா கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
சீனா-இலங்கை நட்புக்கு நீண்ட வரலாறு உண்டு, இரு நாட்டு மக்களிடையேயான நட்பின் எதிர்காலம் இந்த மாணவர்களே என்றும் குறிப்பிட்டுள்ளார்.