உலகளவில் கொரோனா தொற்று (கோவிட்- 19) கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து வியாபித்து வருகிறது. சீனாவில் உயிரிழப்பு 3,000 ஐ கடந்துள்ளது. இத்தாலியில் 100ஐ கடந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் முதலாவது கொரோனா உயிரிழப்பு பதிவாகியதையடுத்து, அங்கு அவசரநிலைமை பிரகடப்படுத்தப்பட்டுள்ளது.
உலகில் 93,000 க்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இத்தாலி, ஈரான் மற்றும் அமெரிக்காவில் பல இறப்புகள் பதிவாகியுள்ளது. புதிய தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களையும் பயணக் கட்டுப்பாடுகளையும் இந்த அரசுகள் உருவாக்குகின்றன.
போலந்து, மொராக்கோ, அன்டோரா, ஆர்மீனியா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் வைரஸினால் முதல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
உலகம் முழுவதிலுமாக கொரோனா தொற்று தொடர்பான பிந்தைய தகவல்களின் தொகுப்பு இது.
3,000ஐ கடந்தது உயிரிழப்பு
சீனாவின் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,000 ஐ கடந்துள்ளது. இன்று காலை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்ட அறிவித்தலில், 3,012 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தது.
நேற்று 31 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
கொரோனா.தொற்றினால் நேற்று 139 பேர் புதிதாக பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று முன்தினம் 119 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று பாதிப்பு எண்ணிக்கையில் அதிகரிப்பு தென்பட்டது.
கொரோனா தொற்றினால் 80,409 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கலிபோர்னியாவில் அவசர நிலை
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு 53 பேர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியிருந்த நிலையில், நேற்று மாகாணத்தில் முதலாவது மரணம் பதிவாகியது. இதையடுத்து மாகாண ஆளுனர் கவின் நியூசோம் அவசரகால நிலைமையை இன்று பிரகடப்படுத்தியுள்ளார்.
Governor @GavinNewsom today declared a State of Emergency to make additional resources available, formalize emergency actions already underway across multiple state agencies and departments, help the state prepare for broader spread of #COVID19, and more.https://t.co/J0edoIPlPu
— Office of the Governor of California (@CAgovernor) March 5, 2020
இத்தாலியில் பாடசாலை, பல்கலைகழகங்கள் மூடல்
இத்தாலியிலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைகழகங்களையும் நாளை முதல் மூடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 15ம் திகதி வரை இந்த தடை அமுலில் இருக்கும். கல்வி அமைச்சர் லூசியா அஸ்ஸோலினா இந்த அறிவிப்பை விடுத்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் இத்தாலியில் வைரஸ் தாக்கத்தினால் 28 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 107 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 276 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதிசெய்யப்பட்டிருந்தது. அதேவேளை, நோய்த் தொற்றிற்கு இலக்காகியிருந்த 160 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, இத்தாலியில் நடைபெறும் கால்பந்து போட்டிகள் மற்றும் பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் தற்காலிகமாக ரசிகர்கள் தடைசெய்யப்பட்டுள்ளனர். மக்கள் கூடுவதை தடுத்து, கொரோனா பரவலை தவிர்க்க இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக இத்தாலி தெரிவித்துள்ளது.
ஹங்கேரியில் இருவர் அடையாளம் காணப்பட்டனர்
கொரோனா தொற்றி்கு இலக்கான இருவரை அடையாளம் கண்டுள்ளதாக ஹங்கேரிய பிரதமர் பிரதமர் விக்டர் ஓர்பன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஈரானிய மாணவர்கள் இருவரே தொற்றிற்கு இலக்காகியுள்ளனர்.
பிரான்சில் திடீர் அதிகரிப்பு
கொரோனா வைரஸினால் 285 பேர் பிரான்ஸில் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 73 பேர் நோய்த் தொற்றிற்கு இலக்காகியதன் மூலம், எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.
பிரான்ஸில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
சுவீடனில் 52 பேருக்கு தொற்று
சுவீடனின் ஸ்டாக்ஹோமில் தொற்றிற்கு இலக்கான புதிய நபர்கள் அடையாளம் காணப்பட்டதன் மூலம், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது.
புதிதாக தொற்றிற்கு இலக்கான 16 பேர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அல்ஜீரியாவில் மேலும் 9 பேருக்கு தொற்று
அல்ஜீரியாவில் நேற்று புதன்கிழமை ஒன்பது பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகியிருப்பது கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
பிளிடா மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர், தலைநகர் அல்ஜியர்ஸிலிருந்து 30 கி.மீ தெற்கே, ஒரு இத்தாலிய மனிதர் ஆகியோரே பாதிக்கப்பட்டுள்ளனர்.
சவுதியில் மேலுமொருவருக்கு தொற்று
ஈரானில் இருந்து பஹ்ரைன் வழியாக சவுதிக்கு வந்த அந்த நாட்டைச் சேர்ந்தவர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளார். ஈரானிலிருந்து வந்ததை அவர் தெரிவிக்காமல் நாட்டிற்குள் அவர் நுழைந்துள்ளார்.
சவுதியில் தற்போது இருவர் தொற்றிற்கு இலக்காகியுள்ளனர்.
ஈராக்கில் மேலுமொருவர் உயிரிழப்பு
ஈராக்கில் கொரோனா உயிரிழப்பு இரண்டாக உயர்ந்துள்ளது. நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். பல நாட்பட்ட நோய்களிற்கு இலக்காகியிருந்த ஒருவரே கொரோனா தாக்கத்தால் உயிரிழந்ததாக ஈராக் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.